மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, ஓய்வறியாமல் தான் கொண்ட கம்யூனிச கொள்கைகளுக்காக உழைத்தவர் யெச்சூரி. மூன்றாவது முறையாக கடந்த 2022-ம் ஆண்டு கண்ணூரில் நடந்த மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளாரகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் தரமான சம்பவங்கள், தக் லைப் விளக்கங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்..,
1974ஆம் ஆண்டு இந்திய மாணவர் கூட்டமைப்பில் (SFI) இணைந்ததன் மூலம் தொடங்கிய அவரின் அரசியல் பயணம், தற்போது மரணத்தின் மூலமே நிறைவுக்கு வந்திருக்கிறது.., கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சாராத ஒருவர், இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக முதலில் தேர்வானது சீத்தாராம் யெச்சூரி தலைவரானபோதுதான். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சீத்தாரம் யெச்சூரி முதுகலைப் பொருளாதாரம் படித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. JNU மாணவர் சங்கத்தின் தலைவராகவும் அவர்தான் இருந்தார். எமெர்ஜென்சிக்குப் பிறகு ஆட்சியை இழந்த இந்திராகாந்தி, JNU வேந்தர் பதவியை மட்டும் தொடர்ந்து வந்தார். அதற்கு எதிராக மாணவர்களைத் திரட்டி, இந்திராகாந்தியின் வீட்டுக்கு முன்னால் போராட்டம் நடத்தினார்.., வெளியே வந்த இந்திரா காந்திக்கு முன், அவேந்தர் பதவியிலிருந்த விலவேண்டும் என்கிற மாணவர் சங்கத்தின் தீர்மானத்தை, வாசித்துக் காட்டுகிறார் சீதாராம் யெச்சூரி..,தொடர்ந்து, தன் பதவியை ராஜினாமா செய்கிறார் இந்திரா காந்தி. JNU பல்கலைகழகத்தின் வேந்தர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர இந்தப் போராட்டம் முக்கியக் காரணமாக அமைந்தது. தவிர, எமெர்ஜென்சியின்போது, மாணவராக இருந்த சீத்தாராம் யெச்சூரி கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2005 முதல் 2017 வரை மேற்கு வங்காளத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார் சீத்தாராம் யெச்சூரி. பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து மிக ஆழமாகவும் தெளிவாகவும் விளக்கியவர் யெச்சூரி. தனது இறுதியுரையில், ஒற்றைக் கலாசாரத்தை நிறுவுவதை எதிர்த்தும் இந்தியாவின் ஒற்றுமை குறித்தும் அவர் பேசியது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதில்,``நான் சென்னை பொது மருத்துவமனையில் தெலுங்கு பேசும் பிராமணர் குடும்பத்தில் பிறந்தவன்.
என் குடும்பம் ஐதராபாத்துக்குக் குடிபெயர, இஸ்லாமிய கலாசாரம் கொண்ட பள்ளியில்தான் நான் கல்வி கற்றேன். நான் திருமணம் செய்திருக்கும் பெண்ணின் தந்தை, இஸ்லாமிய சூபி கலாசாரத்தை பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர். தாய், மைசூர் வாழ் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர். இப்போது சொல்லுங்கள், ’எனக்கும் என் மனைவிக்கும் பிறந்த குழந்தை பிராமணரா, இஸ்லாமியரா, இந்துவா எப்படிக் குறிப்பிடுவது?’ இந்தியன் என்று சொல்வதைத் தவிர வேற எதுவும் இல்லை. இதுதான் இந்தியா’’ எனப் பேசியிருந்தார் யெச்சூரி. அவரின் நாடாளுமன்ற உரைகள் தனியாகப் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
ஒருமுறை, பிரபல தமிழ் நாளிதழில் அவரின் நேர்காணல் வெளியானது. அதில், “இந்தியாவில் சுமார் 100 ஆண்டுகளாக இயங்கிவரும் கம்யூனிஸ்ட் கட்சி, கேரளாவைத் தவிர, எங்குமே ஆட்சியில் இல்லை. ஏன் பெருவாரியான மக்களின் நம்பிக்கையை கம்யூனிஸ்ட்டுகளால் பெற முடியவில்லை” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த யெச்சூரி, “கம்யூனிஸ்ட்டுகளின் பலத்தை இரண்டு அளவுகோல்களால் அளவிட வேண்டும். ஒன்று, தேர்தல் வெற்றி. இதில் கம்யூனிஸ்ட்டுகள் பின்னடைவைச் சந்தித்திருப்பதை ஒப்புக்கொள்கிறேன். பணபலத்தைப் பயன்படுத்துவதும், சாதிரீதியான அணிதிரட்டல்கள் - வகுப்புவாத உணர்வைத் தூண்டுவதும் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் முக்கியமான காரணியாக இருப்பதால், ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் ஒப்பிடும்போது கம்யூனிஸ்ட்டுகள் பலவீனமான நிலையில் இருக்கின்றனர்.
மற்றொரு முக்கியமான அளவுகோல், சக்திவாய்ந்த மக்கள் போராட்டங்கள் மூலம் நாட்டை ஆள்வோரின் அஜண்டாமீது செல்வாக்கு செலுத்தும் திறன். இதன் அடிப்படையில் பார்த்தால், வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டம், தொழிலாளர் சட்டங்களை ரத்துசெய்வதற்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கத்தின் நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள், தேசிய சொத்துகளைக் கொள்ளையடிப்பதற்கும், பொதுத்துறையை தனியார்மயமாக்குவதற்கும் எதிரான போராட்டங்கள், வேலைவாய்ப்புக்கான இளைஞர்களின் போராட்டங்கள், புதிய கல்விக் கொள்கை மற்றும் இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்கள் போன்றவற்றில் எல்லாக் கட்சிகளையும்விட முன்னணியில் இருப்பது கம்யூனிஸ்ட்டுகள்தான்” என்று பதிலளித்திருந்தார் யெச்சூரி.