நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் காலை 11 மணிக்கு குடியரசு தலைவர் உரை இடம்பெற உள்ளது. அதன் பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார்.
நாளை காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 2-ஆம் தேதியிலிருந்து காலையில் மாநிலங்களவை, மாலையில் மக்களவை அமர்வு என்கிற திட்டம் பின்பற்றப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாநிலங்களவை அமர்வும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களவை அமர்வும் நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக தனிமனித இடைவெளியுடன் கூட்டத்தொடரின் முதல் பகுதியான பிப்ரவரி 11ஆம் தேதி வரை இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 14 தொடங்கி ஏப்ரல் 8 வரை நடைபெற உள்ளது.