இந்தியாவில் இந்த மண்ணின் சட்டமே செல்லும் என்றும் உங்கள் கொள்கையல்ல என்றும் கூறி ட்விட்டர் சமூக தள நிறுவனத்தை நாடாளுமன்றக் குழு கடுமையாக சாடியுள்ளது.
தங்கள் கொள்கையில் உறுதிபட உள்ளதாக மத்திய அரசிடம் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழுவின் காட்டமான விமர்சனம் வெளியாகியுள்ளது. இந்திய மண்ணின் சட்டதிட்டங்களை மீறியதற்காக ட்விட்டருக்கு ஏன் அபராதம் விதிக்க கூடாது என்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான அக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
சமூக தள நிறுவனங்களை கட்டுப்படுத்தும் விதிகள் தொடர்பாக மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவுகிறது. விதிகளை பின்பற்றாத காரணத்திற்காக ட்விட்டருக்கான சட்டப்பாதுகாப்பையும் மத்திய அரசு திரும்பப் பெற்றிருந்தது. இந்த சூழலில் ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவிடம் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து அக்குழுவின் காரசாரமான விமர்சனம் வெளியாகியுள்ளது