நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (டிச.13) பிற்பகலில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்த இருவர் வண்ணப் புகைக் குப்பிகளை வீசியுள்ளனர். எம்பிக்கள் சிலர், அவர்கள் இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அதற்குள் அவை காவலர்கள் விரைந்து வந்து அவர்களைப் பிடித்துச் சென்றனர். அதேபோல், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் வண்ணக்குப்பிகளை வீசி முழக்கங்களை எழுப்பினர்.
நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம், நாடு முழுவதும் விமர்சனத்துக்குள்ளாகியது. மேலும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், இன்று (டிச.14) காலையில் மக்களவை கூடியதும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர், “மக்களவையில் நடந்த சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாம் அனைவரும் பார்வையாளர்களுக்கான பரிந்துரை கடிதத்தைக் கவனமாக வழங்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.
அப்போது, பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றுகோரி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்பிக்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அமளில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தினார். ஆனாலும், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் 2 மணிக்கு அவை கூடியது. அப்போதும், தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இது அவை நடவடிக்கைக்கு இடையூறாக இருந்தது.
இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு இடையூறாகச் செயல்பட்டதாகக் கூறி,
ஜோதிமணி,
ரம்யா ஹரிதாஸ்,
டி.என்.பிரதாபன்,
ஹிபி இடன்,
டீன் குரியகோஸ் ஆகிய 5 எம்பிக்களையும் சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்தார். இவர்கள், நடந்துவரும் குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து தமிழக எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த,
கனிமொழி (திமுக),
மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்),
சு.வெங்கடேசன்(மார்க்சிஸ்ட்),
பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட்),
கே.சுப்பராயன்(இந்திய கம்யூனிஸ்ட்),
எஸ்.ஆர்.பார்த்திபன்(திமுக), உள்ளிட்ட எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர பென்னி பாஹன், விகே ஸ்ரீகந்தம், முகமது ஜாவித் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர, மாநிலங்களவையில் ஈடுபட்ட டெரிக் ஓ பிரையன் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மொத்தத்தில் இன்று மட்டும் அமளியில் ஈடுபட்ட 15 எம்பிக்கள் (மக்களவை 14, மாநிலங்களவை 1) நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடும் அமளி காரணமாக மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்.பிக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, “பாஜகவின் உறுப்பினர் ஒருவர் கொடுத்த பாஸ்மூலம் பார்வையாளர்களாகப் பிடிபட்ட இருவரும் உள்ளே நுழைந்து இருந்தனர் என்பதை தெரிந்தும் இதுதொடர்பாக எந்த உறுப்பினர் அனுமதி சீட்டுடன் உள்ளே நுழைந்தார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தேன். ஆனால் அதற்குப் பதில் அளிக்காமல் சபாநாயகர் தனியாகப் பேசுவதற்கு அழைத்தார். ஆனால் இறுதிவரை எந்த உறுப்பினர் அனுமதிச் சீட்டு வழங்கினார் என்பதை அவர் சொல்லவில்லை. புதிய நாடாளுமன்றத்திற்கு ஏற்றதுபோல் பாதுகாப்பு அதிகாரிகளைக் கூடுதலாக நியமனம் மேலும் செய்திருக்க வேண்டும். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டபிறகே கூட்டத்தொடரை கூட்டி இருக்க வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அனுமதி அளிக்காதபோது, சபாநாயகர் எப்படி எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்கக்கூடாது என கூறுவார்? அனைத்தையும் மத்திய அரசு அவசரமாகச் செய்வதால் தவறுகள் நடைபெறுகிறது. பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டபிறகு, தற்போதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது இதுவரை தெரியப்படுத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.