பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் தினமும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாகவே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி வரை இரண்டு பாகங்களாக நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 29 அமர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் மக்களவையில் மொத்தமாக 22.2 மணி நேரமாகவும் மாநிலங்களவையில் 18.9 மணி நேரமாகவும் உள்ளது. இதில் மக்களவையில் 182 கேள்விகளுக்கும் மாநிலங்களவையில் 141 கேள்விகளுக்கும் மத்திய அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர்.
இந்த கூட்டத்தொடரில் குற்றவியல் நடைமுறை மசோதா 2022, டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் திருத்த மசோதா 2022 உள்ளிட்ட 7 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக குற்றவியல் நடைமுறை மசோதா 2022-ல் மீது சுமார் 5 மணி நேரம் விவாதம் என்பது மக்களவையிலும் 3.45 மணி நேரம் மாநிலங்களவையிலும் நடைபெற்று, இந்த மசோதா இரண்டு அவைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.
வருடத்தின் மிக நீளமான இந்த கூட்டத்தொடர் இரண்டு பகுதிகளாக நடைபெற்ற நிலையில், இடைப்பட்ட காலத்தில் உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு 4 மாநிலங்களில் வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து, கூட்டத் தொடரின் இரண்டாம் பாகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் அதிகம் முடக்கவில்லை.
இரண்டாவது பாகம் நடைபெற்ற நேரத்திலேயே எரிபொருள் விலை உயர்வு தினசரி நடைபெற்றதால், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தொடரின் முதல் பாகத்தைப் போல அடிக்கடி அவை முடக்கத்தில் ஈடுபடவில்லை.
பட்ஜெட், மானியக் கோரிக்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு மசோதா ஆகியவற்றுக்கு ஏற்கனவே மத்திய அரசு ஒப்புதல் பெற்றுள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை வியாழக்கிழமையன்று தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே முடிவுக்கு வருகிறது என்கிற அறிவிப்பு மாநிலங்களவையில் வெளியிடப்பட்டபோது கூட எதிர்க்கட்சிகளின் முழக்கம் தொடர்ந்தது என்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.