பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் பல உரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று டெல்லி டால்கடொரா அரங்கத்தில்‘பரிட்சையின் மேல் விவாதம் 2.0’(pariksha pe charcha 2.0) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோடி மாணவர்களிடம் உரையாடினார்.
இந்த நிகழ்ச்சிக்காக இரண்டாயிரம் மாணவர்கள் நமோ அப் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களிடம் பிரதமர் மோடி, தேர்வில் எப்படி மதிபெண்கள் எடுப்பது, மன அழுத்தத்தை கையாள்வது போன்றவை குறித்து உரையாடினார்.
மேலும் “மாணவர்களின் மன அழுத்தத்தை சரிசெய்ய பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களிடம் உரையாட வேண்டும். அத்துடன் ஒரு மாணவரை மற்றொரு மாணவருடன் ஒப்பீடக் கூடாது. அந்தந்த மாணவரின் செயலுக்கே உரிய பாராட்டை அளிக்கவேண்டும்”என்றார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய மோடி “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த வழிவகுக்க வேண்டும். அத்துடன் பெற்றோர்கள் தங்களின் நிறைவேறாத கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது” என்றார்.
இந்த நிகழ்ச்சியை நமோ அப் மூலம் ரஷ்யா, நைஜிரியா,இரான், தொஹா, நேபாள்,குவைத்,சவுதி அரேபியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள மாணவர்களும் பங்கேற்றனர்.