கொல்கத்தா மருத்துவர் கொலை | “முதல்வர் மீது நம்பிக்கை இல்லை” - குற்றஞ்சாட்டும் பெற்றோர்!

“இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை” என கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிஎக்ஸ் தளம்
Published on

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதில் மாநில அரசின் போக்கு மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மத்திய புலனாய்வு அமைப்பும் விசாரணையை நடத்தி வருகிறது.

இதற்கிடையே பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்களை வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாகவும் இக்கொலை சம்பவத்தில் மருத்துவமனைக்கு உள்ளேயும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே மாநிலத்தின் முதல்வர் மம்தாவே குற்றஞ்சாட்ட நபர்களுக்கு கடும் தண்டனை தரவேண்டும் எனக் கூறி பேரணி நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சிபிஐ குழுவைச் சேர்ந்த 5 மருத்துவர்கள் சஞ்சய் ராயிடம் உளவியல் சோதனை நடத்தினர். அடுத்தகட்டமாக நீதிமன்ற அனுமதியுடன் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

இதையும் படிக்க: தாய்லாந்து | மிக இளம்வயது பிரதமரானார் பேடோங்டர்ன் ஷினவத்ரா.. அரசியலில் நுழைந்தது எப்படி?

மம்தா பானர்ஜி
கொல்கத்தா மருத்துவர் கொலை: வெடித்த வன்முறை.. தடயத்தை அழித்ததா மர்ம கும்பல்? ஆலியா பட் போட்ட பதிவு!

இதனிடையே வழக்கின் தீவிரத்தை உணர்ந்து உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இவ்வழக்கை நாளை விசாரிக்கவுள்ளது. ஒருபக்கம் சிபிஐ விசாரணை, மறுபுறம் உச்சநீதிமன்ற விசாரணை என வழக்கு வேகமெடுத்துள்ள நிலையில், “இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை” என கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில், “ஆரம்பத்தில் அவர்மீது (மம்தா) முழு நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் இப்போது இல்லை. அவர் எதற்காக இந்த விஷயத்தில் நியாயம் கேட்கிறார்? இந்த சம்பவத்துக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், அது எதையும் அவர் செய்யவில்லை. மம்தா பானர்ஜியின் அனைத்து திட்டங்களும் (கன்யாஸ்ரீ-லட்சுமி) போலியானவை. இந்தத் திட்டங்களைப் பெற விரும்புவோர், அவற்றைப் பெறுவதற்கு முன் தயவுசெய்து உங்கள் லட்சுமி (மகள்) பத்திரமாக இருக்கிறாரா எனப் பார்க்கவும்.

எங்கள் மகளுக்கு நடந்த பாலியல் வன்புணர்வு ஒருவரால் மட்டும் நடந்திருக்காது என மருத்துவர்கள் சொன்னதை வைத்தே நாங்களும், ஆரம்பம் முதலே இது பலரால் நடந்திருக்க வேண்டும் என்றே கூறி வருகிறோம். அந்த அளவுக்கு எங்கள் மகள் பாதிக்கப்பட்டிருந்தார். எங்கள் மகளின் பாதுகாப்புக்குக் காரணமானவர்களே, அவளைக் காப்பாற்றத் தவறியதுதான் சோகமான விஷயம்” எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இந்த விஷயத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி நிலைமையை கையாள தவறிவிட்டார் எனவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: “6 மணிக்குமேல் NoWork”- பேட்டிகொடுத்த இந்தியர் பணிநீக்கம்? புதிய CEO-க்கு இத்தனை கோடி சம்பளமா?

மம்தா பானர்ஜி
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை | ”ஆளும்கட்சி போராட்டம் ஏன்?” மம்தாவை சீண்டிய நிர்பயாவின் தாயார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com