ரயில் பயணச்சீட்டு முன் பதிவு செய்வதைப் போல, ரயில்வே பார்சல் சேவையிலும் முன்பதிவு முறையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
பார்சல் சேவையில், முன்பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என வர்த்தக சங்கங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, பயணிகள் ரயில்களில் இயக்கப்படும், பார்சல் வேன்களில் வர்த்தகர்கள் தாங்கள் வைத்திருக்கும் பொருட்களின் எடைக்கு ஏற்ப இடத்தை 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால், ஒப்பந்த குத்தகை அடிப்படையில் உள்ள பார்சல் வேன்களில் முன்பதிவு செய்ய முடியாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பிட்ட பயணிகள் ரயில் அல்லது கால அட்டவணையில் இயக்கப்படும் பார்சல் ரயில்கள் ஆகியவற்றில் சரக்குகளை அனுப்புவது, இந்த புதிய திட்டத்தின் சிறப்பம்சங்களாகக் கூறப்பட்டுள்ளது.
பார்சல்ளை முன்பதிவு செய்ய விரும்புவோர் தங்களுக்கு அருகிலுள்ள ரயில் நிலையத்தின் பார்சல் பிரிவு மேற்பார்வையாளரையோ அல்லது ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள வர்த்தக பிரிவையோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 139 - யையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.