ஜாட் அமைப்பு, பாஜக பேரணியால் ஹரியானாவில் பதற்றம்: 11 மாவட்டங்களில் செல்போன் முடக்கம்

ஜாட் அமைப்பு, பாஜக பேரணியால் ஹரியானாவில் பதற்றம்: 11 மாவட்டங்களில் செல்போன் முடக்கம்
ஜாட் அமைப்பு, பாஜக பேரணியால் ஹரியானாவில் பதற்றம்: 11 மாவட்டங்களில் செல்போன் முடக்கம்
Published on

ஹரியானாவில் ஜாட் மற்றும் பாஜக பேரணிகள், ஆர்பாட்டம் காரணமாக, அசம்பாவிதங்களை தவிர்க்க 11 மாவட்டங்களில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

ஹரியானாவில் நவம்பர் 26 ஆம் தேதி (நாளை) ஜாட் சமுதாயத்தைச் சேர்ந்த யாஷ்பால் மாலிக் தலைமையிலான அகில இந்திய ஜாட் ஆராக்‌ஷன் சங்கார்ஸ் சமிதி அமைப்பின் சார்பாக பேரணி நடைபெற உள்ளது. இந்த அமைப்பின் சார்பாக ரோஹ்டாக் மாவட்டத்தில் கட்டப்பட உள்ள பயிற்சி நிறுவன அடிக்கல் நாட்டு விழாவிற்காக யாஷ்பால் பால் மாலிக் தலைமையில் பேரணி செல்ல உள்ளனர்.

ஹரியானாவின் ஜிண்ட் மாவட்டத்தில் பாஜக எம்பி ராஜ்குமார் சைனி தலைமையில், ஜாட் சமுதாய மக்கள் அரசு வேலையில் இட ஒதுக்கீடு கோருவதை எதிர்த்து பேரணி நடக்க உள்ளது. இந்த இரு பேரணிகளும் நடக்கவுள்ள மாவட்டங்களுக்கு அருகிலுள்ள 11 மாவட்டங்களில், அசம்பாவிதத்தை தடுக்கும் பொருட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அம்மாநிலத்தின் கூடுதல் முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ்.பிரசாத் காவல்துறையினருக்கு அனுப்பிய உத்தரவில், என்னை பொறுத்தவரையில் இந்த இரு பேரணிகளால் பொதுமக்கள் காயமடையலாம், உயிரிழக்கலாம், பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படலாம், மேலும், சமூக விரோதிகளால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம். அதனால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹரியானா அரசு 11 மாவட்டங்களில் நாளை நள்ளிரவு வரை 2ஜி, 3ஜி, 4ஜி இணையதள சேவைகள், எஸ்எம்எஸ் உள்ளிட்ட சேவைகளை முடக்கியுள்ளது.

ஹரியானாவில் இது முதல் முறை அல்ல, ஏற்கனவெ ஜாட் சமூகத்தினரின் பேரணியை முன்னிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 முறை இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஜாட் சமூகத்தினரின் பேரணியின் போது 30 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அதற்காக அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

2016-ல் நடந்த பேரணியில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்காக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் யாஷ்பால் மாலிக்-க்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அந்த இளைஞர்கள், ஜாட் சமூகத்தினரின் மஹாபஞ்சாயத்தை மீறி யாஷ்பால் மாலிக் செயல்படுவதாகவும், நன்கொடைகளை வசூலித்துவிட்டு எதுவும் செய்யவில்லை என்றும், தங்களை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர ஹரியானா அரசிடம் மாலிக் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று கூறி அவர்களும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஹரியானாவின் அமைதியை கேள்விக்குள்ளாக்கும் விதமாக நடைபெற உள்ள பேரணியை தடுத்து, யாஷ்பால் மாலிக் மற்றும் பாஜக எம்பி ராஜ்குமார் சைனி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாட் சமூகத்தின் மஹாபஞ்சாயத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளானர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com