கேரளாவில் பாராகிளைடிங் செய்த சுற்றுலாப் பயணிகள் இருவர் மின்கம்பத்தில் சிக்கிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வர்கலாவில் உள்ள பாபநாசம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் இருவர் பாராகிளைடிங் செய்ய திட்டமிட்டனர். அதன்படி, அவர்கள் சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக அவர்களுடைய பாராசூட் மின்கம்பத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் அவர்கள் நினைத்த இடத்தில் இறங்க முடியாமல் தவித்தனர். மேலும், அவர்களும் மின்கம்பத்தில் தொங்கியபடி இருந்தனர். 50 அடி உயரமுள்ள மின்கம்பத்தில் சிக்கிய அவர்கள், அதிலிருந்து விழாமல் இருக்க முயன்றபடி இருந்தனர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் அவர்கள் தொங்கியதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர். அதில், பாராகிளைடிங் பயிற்சியாளருடன் 28 வயது பெண்ணும் மீட்கப்பட்டார். இதுபோன்று நிகழ்வது முதல்முறையல்ல என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் ஒரேநாளில் இரண்டு வெவ்வேறு பாராகிளைடிங் சம்பவங்களில் இப்படி அசம்பாவிதம் ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர். குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் பாராகிளைடிங் செய்த 50 வயது தென் கொரியர் ஒருவர் தரையில் விழுந்து இறந்தார். அதேபோல், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 30 வயது சுற்றுலாப் பயணி ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தின் தோபி பகுதியில் பாராகிளைடிங் செய்தபோது தவறி விழுந்து இறந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். நல்வாய்ப்பாக இந்நிகழ்வில் அப்படி ஏதும் நிகழவில்லை.
- ஜெ.பிரகாஷ்