வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சிபிஎஸ்இ மறுத்தேர்வு அறிவித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி ஷகர்புர் பகுதியைச் சேர்ந்த ரீபக் கன்சால் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தகவல்கள் மற்றும் புகார்கள் வந்தபோதும், வினாத்தாள் எதுவும் லீக் ஆகவில்லை என்று சிபிஎஸ்இ கூறியது. மாணவர்களும், பெற்றோர்களும் பயப்பட வேண்டாம் என வலியுறுத்தியது. இந்த ஆண்டு 16,38,428 மாணவர்கள் 10ம் வகுப்பும், 11,86,306 மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வு எழுதுகிறார்கள். இந்த நிலையில் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகாரில் விசாரணை முடிவதற்கு முன்பாக ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் தண்டனை அளிக்கப்படுவது மாணவர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது. அதோடு, இது சட்டவிரோதமானது, தன்னிச்சையான நடவடிக்கை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொருளாதாரம் மற்றும் 10ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியான சம்பவத்தில், பொருளாதாரம் பாடத்திற்கு ஏப்ரல் 25ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு கணித்தேர்வு வினாத்தாள் டெல்லி மற்றும் ஹரியானாவில் மட்டுமே வெளியானதால், மறு தேர்வு நடத்துவது குறித்து 15 நாட்களில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.