ஒபிசி உட்பிரிவுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்துக்கான அவகாசம் 2019 மே 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சார்ந்த பல்வேறு சமுதாயத்தினர் கல்வி, மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள உட்பிரிவுகளை கண்டறிந்து மத்தியப் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மத்திய திட்டமிட்டது.
அதன்படி ஆய்வு மேற்கொள்வதற்கான ஆணையத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமித்தார். அதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ரோஹினி நியமிக்கப்பட்டார். மேலும், அந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக ஜே.கே.பஜாஜ் உள்ளிட்ட மூன்று பேர் நியமிக்கப்பட்டனர்.
இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உட்பிரிவுகளை கண்டறியும் ஆணையம் மூலம், அந்தப் பிரிவுகளை சேர்ந்த ஏராளமானோருக்கு அரசு பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் வாய்ப்பு கிடைக்கப்பெறும் என கூறப்பட்டது. இதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, நீதிபதி ரோஹினி தலைமையிலான 5 பேர் கொண்ட இந்த ஆணையத்தின் காலம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆணையம் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க நவம்பர் 30 வரை அவகாசம் தரப்பட்ட நிலையில் மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.