”சாதியை, கடவுள் உருவாக்கவில்லை; பண்டிதர்கள்தான் உருவாக்கினார்கள்” என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று, இந்து மதக் குருக்களில் ஒருவரான சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “நாம் சம்பாதிக்கும்போது நமக்கு பொறுப்பு உருவாகிறது. அப்படி இருக்கையில், எந்த வேலையும் பெரியது சிறியது எனக் கிடையது. வேலைகளில் பாகுபாடுகள் இல்லாதுபோல மனிதர்களிலும் பாகுபாடுகள் கிடையாது. நம்மைப் படைத்த கடவுளின் முன் நாம் அனைவரும் சமமானவர்கள். சாதி, பேதம் என்று ஏதும் இல்லை. இந்த சாதிப் பாகுபாட்டை பண்டிதர்கள்தான் உருவாக்கினார்கள்.
அது தவறானது. நீங்கள் முன்னேற்றத்திற்காக உழைத்து சமூகத்தை ஒற்றுமையுடன் வைத்திருங்கள். அதுதான் மதத்தின் சாரம். காசியில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டபோது சத்ரபதி சிவாஜி ஒளரங்கசீப்புக்கு எழுதிய கடிதத்தில், `இந்துக்களும், முஸ்லிம்களும் கடவுளின் பிள்ளைகள். இதில் ஒருவர்மீது விரோதத்தைக் காட்டுவது தவறு. அனைவருக்கும் மதிப்பு கொடுப்பது உங்களது கடமை. இந்துக்களுக்கு எதிரான செயல்கள் நிறுத்தப்படவில்லையெனில் நான் வாள் எடுக்கவேண்டி வரும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
எந்த விதமான வேலை செய்தாலும் அந்த வேலைக்கு மரியாதை தர வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை தராததே வேலையின்மைக்கு முக்கிய காரணம். அரசால் 10 சதவீத வேலையையும், மற்றவர்கள் 20 சதவீத வேலையையும் உருவாக்க முடியும். எந்த சமூகமும் 30 சதவீதத்தை தாண்டி வேலைகளை உருவாக்க முடியாது. எனவே, அனைத்து விதமான வேலைகளையும் மதிப்புடன் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும்” என்றார். மோகன் பகவத், அடிக்கடி சர்ச்சைக்குரிய வகைகளில் பேசிச் சிக்கிக்கொள்வதும் உண்டு.