ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் மார்ச் 31-ஆம் தேதியுடன் செயலிழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமானவரி முறைகேடுகளை தவிர்ப்பதற்காக ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றமும் பான் கார்டினை ஆதாருடன் இணைக்க வேண்டியது அவசியம் என வருமானவரித்துறைக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு வருமானவரித்துறை கால நிர்ணயம் வழங்கியது. ஆனால் பல கோடி பேர் இணைக்காத காரணத்தால் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறாக பலமுறை காலஅவகாச நீட்டிப்புகள் தொடர்ந்தன. இறுதியாக அளிக்கப்பட்ட கால அவகாசத்தின்படி வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் - பான் எண்களை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் மார்ச் 31ஆம் தேதிக்கு பின்னர் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலிழக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் 30.75 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் இன்னும் 17.58 கோடி பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.