ராஜஸ்தானில் எல்லை தாண்டி ஊடுருவிய பாகிஸ்தான் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பிப்ரவரி 26ம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீர் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட அன்று காலையில், குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டத்தை ஒட்டிய பகுதியில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் ஒன்று முதலில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இரண்டாவதாக, ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்னேர் பகுதியில் சுற்றித் திரிந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தானின் கங்கா நகர் பகுதியில் மீண்டும் அத்துமீறி நுழைந்த ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 26இல் பாகிஸ்தான் மீதான விமானப்படை தாக்குதலுக்குப் பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட மூன்றாவது உளவு விமானம் இதுவாகும்.