உக்ரைனில் இருந்து மீட்டதற்காக பாகிஸ்தான் மாணவி ஒருவர், இந்தியத் தூதரகத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை 'ஆபரேஷன் கங்கா' என்ற திட்டத்தின் கீழ் இந்தியா மீட்டு வருகிறது. இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இத்திட்டத்தின் மீட்கப்பட்டு தாய்நாடு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி அஸ்மா ஷஃபிக் என்பவர் அங்கிருந்து வெளியேறி மேற்கு உக்ரைனை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனால், திடீரென அந்தப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்ததால் அந்த மாணவியால் அந்தப் பகுதியை விட்டு வெளியேற முடியவில்லை.
இவ்வாறு இரண்டு நாட்களாக அந்தப் பகுதியில் சிக்கித் தவித்த அவரை, இந்தியத் தூதரக அதிகாரிகள் இன்று மீட்டு மேற்கு உக்ரைனுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து பாகிஸ்தானுக்கு அவர் விமானத்தில் சென்றார். முன்னதாக, அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "நான் பாகிஸ்தானுக்கு பத்திரமாக திரும்புகிறேன் என்றால் அதற்கு இந்தியத் தூதரக அதிகாரிகள் தான் காரணம். இதற்காக அவர்களுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார்.