உளவு பார்த்ததாக கூறப்படும் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பாக்., சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் இன்று சந்திக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது, ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி அவரை பாகிஸ்தான் கடந்த 2016ம் ஆண்டு கைது செய்து மரண தண்டனையும் விதித்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்திய தூதரக அதிகாரிகள் ஜாதவை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் இன்று சந்திக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.