ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெயிண்டர் ஒருவருக்கு லாட்டரியில் 2.5 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இனி தன் பணக்கஷ்டம் நீங்கிவிடும் என அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தைச் சேர்ந்த சுருரு பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகளுக்கு தந்தையான இவர், குடும்ப வறுமை காரணமாக பெயிண்டர், எலெக்ட்ரீஷியன் என பல தொழில்களை செய்து வருகிறார். இந்நிலையில் தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற இவர், வீடு திரும்புகையில் தீபாவளி சிறப்பு லாட்டரி சீட்டுகள் இரண்டை வாங்கினார். லாட்டரி சீட்டுகளை நம்பி வாங்கிய அவர், வழக்கம்போல் தன் வேலைகளை பார்க்கத் தொடங்கியுள்ளார். ஆனால் அந்த லாட்டரி சீட்டுகள் தன்னை கோடீஸ்வரனாக்கும் என அவருக்கு அப்போது தெரியவில்லை.
தீபாவளி சிறப்பு லாட்டரி சீட்டின் முடிவு கடந்த 1-ம் தேதி வெளியானது. சஞ்சீவ் வாங்கிய இரு லாட்டரி சீட்டுகளில் ஒரு சீட்டுக்கு ரூ.2.5 கோடி பரிசு விழுந்தது. இதனால் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் சஞ்சீவ். தனக்கு கிடைத்த பரிசுத்தொகையால் தன்னுடைய வறுமை நீங்கும் என்றும், தன்னுடைய இரு குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்துக்கு இந்த பரிசுத்தொகையை பயன்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.