தமிழக பாரதிய ஜனதாவில் பல்வேறு பதவிகளை வகித்து ஆளுநர்களாக நியமிக்கப்பட்டவர்கள் குறித்து ஓர் தொகுப்பைப் பார்க்கலாம்.
தமிழிசை சௌந்தராஜன்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு ஏற்றார்.
இல.கணேசன்!
தஞ்சையைச் சேர்ந்த இல.கணேசன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராகவும், துணைத் தலைவராகவும் இருந்தவர். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்தார். மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இல. கணேசன், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர், தற்போது நாகலாந்து மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
சி.பி. ராதாகிருஷ்ணன்!
திருப்பூரைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்தவர். கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராகவும், அகில இந்திய தென்னை நார் வாரியத் தலைவராகவும் இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், இரண்டு முறை கோவை மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வானவர். தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சண்முகநாதன்!
இதேபோன்று தஞ்சையை சேர்ந்த சண்முகநாதன், பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார்.