சூடானில் சிக்கித் தவிக்கும் ஹக்கி பிக்கி பழங்குடியினர்.. யார் இவர்கள்? - ஓர் தொகுப்பு
கர்நாடகத்தைச் சேர்ந்த ஹக்கி பிக்கி பழங்குடி சமூகத்தினர், உள்நாட்டுப் போர் நடக்கும் சூடானில் சிக்கியிருக்கிறார்கள். யார் இந்த பழங்குடி மக்கள்? எப்படி சூடான் சென்றார்கள்.. பார்க்கலாம்.
கர்நாடகாவில் பறவைகளை வேட்டையாடுவதையும் நாட்டு மருந்துகள் தயாரிப்பதையும் பாரம்பரிய தொழிலாகக் கொண்டவர்கள் ஹக்கி பிக்கி பழங்குடி சமூகத்தினர். இவர்களில் 300 பேர் தற்போது சூடானில் சிக்கியிருக்கின்றனர். தாயகத்தில் காடுகள் குறைந்துபோகவே தொழில் இல்லாமல், நாட்டு மருத்துவம் செய்து தங்கள் குடும்பம், குழந்தைகளைக் கரையேற்றுவதற்காக சூடானுக்குச் சென்றவர்கள்தான் இவர்கள். ஹக்கி பிக்கி பழங்குடி சமூகத்தினர் சூடானின் தலைநகர் கர்டோமை சுற்றியும், மேற்கு சூடானின் டார்பர் பகுதியிலும் வாழ்ந்து வருகின்றனர். டார்பரில் நடக்கும் யுத்தத்தால் அல் பஷிர் நகரத்துக்கு ஹக்கி பிக்கிகள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மைசூரூக்கு அருகிலுள்ள காடுகளிலிருந்து மருந்துகளைத் தயாரித்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு எடுத்துச்செல்வது படிப்படியாக லாபகரமான தொழிலாக மாறவே, ஹக்கி பிக்கி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் சூடானுக்குப் பயணித்தார்கள். தசை வலிக்கான எண்ணெய்கள், கசாயங்களையும் தயாரிப்பது அவர்களது வழக்கம். இவர்கள் தயாரிக்கும் கூந்தல் தைலங்களும் பிரசித்தி பெற்றவை.
சூடானில் உள்ள டார்பரில் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக மருத்துவமனைகள் இல்லாத நிலையில், மூலிகை மருந்துகளுக்கு மக்களிடம் தேவை அதிகரித்தது. சூடானுக்குப் பயணம் செய்தால் சில லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு, ஹக்கி பிக்கி மக்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. கர்நாடகாவில் வாழ்ந்தால் அவர்கள் வாழ்நாளுக்கும் பார்க்க முடியாத தொகை அது. இந்தச் சூழலில் பாலைவனச் சோலையாக நிழல் அளித்த சூடானும் இப்போது அவர்களது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.