மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2019 ஆண்டு முதல் நிதியமைச்சராக 6 ஆவது முறையாக தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. 58 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார் நிர்மலா சீதாராமன்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ள நிலையில் அதனையொட்டிய விவாதங்கள் இப்போது எழுந்துள்ளன.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மத்திய பட்ஜெட் குறித்து டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இளைஞர்களைப் பற்றி நிறைய பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் வேலை வாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை. 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் கிராமப்புறங்களில் 8.3% நகர்புறங்களில் 13.8% வேலையில்லாமல் இருக்கின்றனர். 25 வயதிற்கு உட்பட்ட படித்த இளைஞர்கள் 42 சதவிகிதம் பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர். 30 முதல் 34 வயது வரையிலான படித்த இளைஞர்கள் ஒன்பது புள்ளி எட்டு சதவிகிதம் வேலையில்லாமல் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை கூட நிதியமைச்சர் கூறவில்லை.
கடந்த பத்து வருடங்களாக இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் கனவுகளை உடைக்கும் வேலையை தான் மத்திய அரசு செய்து வந்துள்ளது. விவசாயிகள் பற்றி பேசிய நிதி அமைச்சர் விவசாயிகள் தற்கொலை குறித்து ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலையில்லாத குறைந்தபட்ச ஆதார விலை இடுபொருட்களின் விலை அதிகரிப்பு காப்பீடு விவகாரங்களில் குளறுபடி போன்ற எந்த ஒரு விஷயம் குறித்தும் எதுவும் பேசப்படவில்லை.
இலவச உணவு தானிய திட்டம் குறித்து பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியா மோசமான நிலையில் இருப்பதை தெரிவிக்கவில்லை. பணவீக்கம் குறித்து மேம்போக்காக குறிப்பிட்ட மத்திய நிதி அமைச்சர் உணவுப் பொருட்களின் விலை 7.7 சதவீதம் வரை அதிகரித்திருப்பது குறித்து எதுவும் பேசவில்லை.
புதிய கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் மருத்துவமனை கல்லூரிகள் கட்டப்படும் என பேசும் நிதி அமைச்சர் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து பேசவில்லை. குறிப்பாக இந்த பணியிடங்கள் எஸ்சி எஸ்டி ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இடங்களாகும். கூட்டாட்சி தத்துவம் என்பதை மத்திய அரசு நசுக்கி வருகிறது.
யு பி ஏ அரசாங்கம் 2013 14 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சியை 6.4% ஆகவும் சராசரி வளர்ச்சியை 7.5% ஆகவும் வைத்து சென்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜிடிபி வளர்ச்சியை ஆறு சதவீதத்திற்கு கீழாக குறைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.