சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதர் பூனவல்லா வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல்களை ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில் Oxford-Astrazeneca என்ற கொரோனா தடுப்பூசியானது கோவிட்-19 சுகாதார பணியாளர்களுக்கும், வயதானவர்களுக்கும் பிப்ரவரி 2021க்குள் செலுத்தப்படும் என்றும், மற்றவர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்குள் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இரண்டு டோசஸுகளில் போடப்படும் இந்த தடுப்பூசிக்கு ரூ.1000 செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தால் 2024க்குள் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரிட்டனில் உள்ள Oxford பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தயாரிப்பு குழு உருவாக்கியுள்ள Oxford-Astrazeneca என்ற தடுப்பூசிதான் இந்தியாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க டாலர் மதிப்புப்படி, 5-6 டாலர்கள் பெறும் இந்த தடுப்பூசியை இந்தியா அதிகளவில் பெறுவதால், 3-4 டாலர் என்ற குறைவான விலையில் கிடைக்கிறது. எனவே மக்களுக்கு முடிந்தவரை மலிவான விலையில் போடுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Oxford-Astrazeneca தடுப்பூசியின் செயல்திறன் பற்றி கூறுகையில், முதியவர்களுக்கு செலுத்தப்பட்டதில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும், டி-செல்களை நன்கு தூண்டியுள்ளது எனவும், அதாவது நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆன்டிபாடி செல்களை தூண்டியுள்ளதாகவும், அதை நீண்ட நாட்களுக்கு தற்காத்துக்கொள்ள இந்த தடுப்பூசிகள் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். அவை எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பது தடுப்பூசி செலுத்திய ஒன்றரை மாதங்களுக்குப் பின்புதான் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்போது எஸ்.ஐ.ஐ அவசர அங்கீகாரம் பெறும் என்பது பற்றி கேட்டதற்கு, '’இங்கிலாந்து அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய மருந்துகள் மதிப்பீட்டு நிறுவனம் விரைவில் அவசரப் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கவுள்ளது. ஆனால் அது முன்களப் பணியாளர்களுக்கும், வயதானவர்களுக்கும்தான் முதலில் பயன்படுத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்தபிறகே குழந்தைகளுக்குப் போடப்படும்; தட்டம்மை நிமோனியாவுடன் ஒப்பிடும்போது கொரோனாவின் தாக்கம் குழந்தைகளிடையே குறைவாகவே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
Oxford தடுப்பூசி பற்றி கூறுகையில், ’’இந்த தடுப்பூசியை 2-8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் வைத்திருத்தல் பாதுகாப்பானது. எனவே வரும் பிப்ரவரி மாதத்திலிருந்து எஸ்.ஐ.ஐ இந்த தடுப்பூசியை ஒரு மாதத்திற்கு 10 கோடி டோசஸ் அளவுக்கு உருவாக்கவுள்ளது. அதில் எந்த அளவு இந்தியாவில் பயன்படுத்தப்படும் என்பது பற்றிய பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.
ஜூலை மாதத்திற்குள் இந்தியாவிற்கு 400 மில்லியன் டோசஸ் தேவைப்படுகிறது. ஆனால் சில 100 மில்லியன் கோவேக்ஸ் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியாவிற்காக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தம் முடிவாகவில்லை. இந்தியாவின் முக்கியத்துவம் கருதி மற்ற எந்த நாடுகளுடனும் இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை. மேலும் அவ்வளவு தடுப்பூசிகளும் கைவசம் இல்லை. முதலில் இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளுக்குப் பிறகுதான் மற்ற நாட்களுக்கு தடுப்பூசி வழங்குவது பற்றி திட்டமிடப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் 30-40 கோடி டோசஸ் Oxford தடுப்பூசிகள் தயாராகிவிடும். மேலும் ஃபைசர் தடுப்பூசியுடனும் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ஆனால் மாடர்னாவுடன் அவ்வளான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை எனத் தெரிகிறது. அதேசமயம் ஃபைசர் தடுப்பூசி பெரும் சவாலாக இருக்கப்போகிறது. காரணம், இந்த தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் வைத்திருக்கவேண்டும்’’ என்று அதர் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி பற்றி டாக்டர் குளேரியா கூறுகையில், ’’தடுப்பூசி கிடைக்கக்கூடிய தன்மையைப் பொறுத்து மக்களுக்கு போடப்படும். நிறையப்பேருக்கு எந்த அறிகுறியும் இல்லமால் கொரோனா வைரஸ் நுரையீரலை நேராக பாதிக்கிறது. இது ஒட்டுமொத்த உடலின் செயல்பாட்டையும் மாற்றிவிடுகிறது. கொரோனா வைரஸ் மூக்கு மற்றும் தொண்டையை மட்டும் பாதிக்காமல் நேரடியாக நுரையீரலைப் பாதிப்பதால் வித்தியாசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது’’ என்கிறார்.