அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காக்க வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உட்பட மொத்தம் 600 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்க்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், நீதித்துறைக்கு அழுத்தம் தரவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடவும் ஒரு சுயநலக் குழு முயன்று வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், “அரசியல் வழக்குகளில் குறிப்பாக, ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல் பிரமுகர்களின் வழக்குகளில், நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முயற்சி நடக்கின்றன. இதுபோன்ற அழுத்தங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும். ஜனநாயக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். பகலில் அரசியல்வாதிகளை பாதுகாப்பவர்களாகவும், இரவில் சமூக ஊடகங்கள் மூலம் நீதிபதிகளுக்கு அழுத்தம் தருபவர்களாகவும் சில வழக்கறிஞர்கள் உள்ளனர்.
கடந்த காலங்களில் நீதிமன்றங்களில் செல்வாக்கு செலுத்துவது எளிதாக இருந்ததாக சிலர் கூறுவது, நீதித்துறையின் செயல்பாட்டை பாதிப்பதாகும். இதுபோன்ற செயல்பாடுகள் நீதிமன்றங்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தின் மீதான தாக்குதல். சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளுடன் இந்திய நீதித்துறையை ஒப்பிடும் நிலைக்கு தள்ளுவதாகும். அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காப்பது அவசியம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே வழக்கறிஞர்கள் கடிதம் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் மற்றவர்களை துன்புறுத்துவதும், அச்சுறுத்துவதம் காங்கிரஸின் கலாசாரம் என விமர்சித்துள்ளார்.
“50 ஆண்டுகளுக்கு முன்பு உறுதியான நீதித்துறைக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்தான் தற்போது தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களிடமிருந்து அர்ப்பணிப்பை எதிர்பார்க்கிறது. ஆனால் தேசத்திற்கான எந்தவொரு அர்ப்பணிப்பிலிருந்தும் விலகுகிறது. 140 கோடி மக்களும் காங்கிரஸை நிராகரித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை” எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.