உத்தரப்பிரதேசம்: அரசு மருத்துவமனையில் 60-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு HIV தொற்று!
உத்தரப்பிரதேசத்தின் மீரட் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 16 மாதங்களில் 60-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள ஆன்டி-ரெட்ரோ வைரஸ் தெரபி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையிலிருந்து, ‘இங்கு பிரசவத்துக்காக வந்தவர்களில் 81 பெண்களுக்கு ஹெச்.ஐ.வி இருந்தது’ என அறிக்கை அளிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரே இத்தகவல் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இவர்களில் 35 பெண்களுக்குப் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அக்குழந்தைகளுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு எச்.ஐ.வி. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எச்.ஐ.வி. தொற்று பரவியதற்கான காரணம் குறித்து கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மீரட் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.