மழை வெள்ளத்தில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில் ஜமுனாமுக் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ரயில் தண்டவாளங்களில் தார்ப்பாய் ஷீட்கள் மூலம் தற்காலிக தங்குமிடங்களை அமைத்து தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஜமுனாமுக் மாவட்டத்திலுள்ள சாங்ஜுரை மற்றும் பாட்டியா பத்தர் கிராமத்தில் வசிப்பவர்கள் வெள்ளத்தில் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்துவிட்டனர். அந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படாத உயரமான நிலப்பரப்பு என்றால் அது தண்டவாளங்கள் மட்டும்தான். எனவே அவர்கள் தார்பாலின் ஷீட்கள் மூலம் தற்காலிக கொட்டகையில் தங்கியுள்ளனர்.
மோசமான வெள்ளப்பாதிப்பில் சிக்கியுள்ள தங்களுக்கு கடந்த ஐந்து நாட்களாக மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்.
அசாமில் மழைவெள்ள பாதிப்பு நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. இதனால் 29 மாவட்டங்களில் உள்ள 2,585 கிராமங்களைச் சேர்ந்த 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் அசாமின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் இதுவரை 21,884 பேரை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 343 நிவாரண முகாம்களில் 86,772 பேர் தஞ்சமடைந்துள்ளதாகவும், மேலும் 411 நிவாரண விநியோக மையங்கள் செயல்படுவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.