வடகிழக்கு டெல்லியை உருக்குலைத்த கலவரத்தின் போது கற்களையும் கவண்களையும் பயன்படுத்தி கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
வன்முறையாளர்கள் கையில் ஏந்திய ஆயுதம் கற்களும் கவண்களும் என்பதற்கு சாட்சியாக பல காட்சிகளை டெல்லியில் காண முடிகிறது. கிழக்கு டெல்லியிலுள்ள கர்தாம்புரியில் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட செங்கற்துண்டுகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பஜன்புரா, யமுனா விஹார், ஜாஃப்ராபாத், கஜூரி காஸ் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்த வாகனங்களில் கற்களை ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. கர்தாம்புரியில் இருந்து மட்டும் 2ஆயிரம் கிலோ உடைந்த செங்கற்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
போராட்டம் நடைபெற்ற இடங்களில் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்காக நிரந்தர அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது தற்போது தெரியவந்ததுள்ளது. வடகிழக்கு டெல்லியில் உள்ள முஸ்தபாபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்காக கவண் போன்ற நிரந்தர அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது காவல் துறை ஆய்வின் போது தெரியவந்துள்ளது.
இந்த கவண் மூலம் சிவ் விகார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக் உள்ளிட்ட வாகனங்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி சேதப்படுத்தப்பட்டுள்ளன. கடைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொடூரப் போருக்கு பிறகான காட்சிகள் எப்படி இருக்மோ அதனை கண்முன் நிறுத்துகின்றன இந்த கற்களும் கவண்களும்.