உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அவ்வரசின் புதிய உத்தரவால் அம்மாநிலத்தில் சுமார் 13 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள், தங்களின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களை அரசின் மாநவ் சம்பதா [Manav Sampada] இணையத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி இல்லையெனில், அவர்களுக்கு இந்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது. மேலும், அவர்களின் பதவி உயர்வுக்கு ஆபத்து ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில் சொத்து விவரங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி தேதியாகக் கடந்த வருட டிசம்பர் 31ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின் அது, ஜூன் 30 ஆகவும், அதற்குப் பிறகு ஜூலை 31 வரையும் நீட்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 26 சதவீத ஊழியர்கள் மட்டுமே இதுவரை தங்களின் சொத்து விவரங்களை அரசின் இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். எனவே ஆகஸ்ட் 31 வரை கடைசி தேதியை மீண்டும் அரசு நீட்டித்திருந்தது. இந்நிலையில், இந்த மாதம் முடிய இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத ஊழியர்களுக்கு இந்த மாதத்திற்கான சம்பளம் கிடையாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சுமார் 17,88,429 அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 26 சதவீதம் பேர உத்தரவை நிறைவேற்றியுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு மட்டுமே இந்த மாதம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் 13 லட்சம் பேர் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத பட்சத்தில் தங்களின் சம்பளத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து அம்மாநில அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி, “இந்த நடவடிக்கை அரசாங்கத்திற்குள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஊழலைப் பொறுத்துக் கொள்ளாத கொள்கையை நாங்கள் கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இத்தகைய நடவடிக்கையை எதிர்க்கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் அசுதோஷ் வர்மா, "2017ல் இதை ஏன் கொண்டு வரவில்லை? இப்போது யோகி ஆதித்யநாத் அரசு பின்தங்கி உள்ளது. அதனால்தான் இப்படி செய்கிறார்கள். தங்கள் ஊழியர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்பதை உணர்ந்துவிட்டனர்” எனச் சாடியுள்ளார்.