இந்தியா: கடந்த 2 மாதங்களில் முதன்முறையாக ஒரு லட்சத்தை ஒட்டிய தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில், கடந்த 2 மாதத்தில் முதன் முறையாக ஒரு லட்சத்தை ஒட்டிய தினசரி கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், 1,00,636 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 25 வது நாளாக, தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருகிறது.
4 மாநிலங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிக ‘தினசரி தொற்றாளர்கள்’ பதிவான மாநிலமாக, முதலிடத்தில் தமிழகம் இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 15.87 லட்ச கொரோனா பரிசோதனைகளே செய்யப்பட்டிருப்பது, பாதிப்பு குறைவாக தெரியவந்ததன் பின்னணியாக பார்க்கப்படுகிறது. முந்தைய நாள்களில் 21 லட்சம் வரை பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதிக பரிசோதனைகள் செய்தால், பாதிப்பும் அதிகம் தெரியவரும் என்பது, நிபுணர்கள் கருத்து. இதுவரை இந்தியாவில் 36.6 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனை வழியாக, தொற்று உறுதிசெய்யப்படுவோர் விகிதம், 6.34 % என்றுள்ளது. இது, கடந்த இரண்டு வாரங்களாக சரிவிலேயே உள்ளது.
இதுவரை நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 2,89,09,975 உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 2,427 பேர் கொரோனாவால் இறந்திருக்கின்றனர். இது, இதுவரை இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கையை, 3,49,186 என உயர்த்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை, 1,74,399. இதன்மூலம், தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை, 14,01,609 என்று உள்ளது. ஒப்பீட்டளவில், நேற்று ஒரு நாளில் சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 76,190 குறைந்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை, 2,71,59,180 என்று உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம், 93.94 சதவிகிதமாக உள்ளது.
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை, இந்தியாவில் 23,27,86,482 என்று உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை, 13 லட்சத்துக்கும் அதிகம்.