பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளால் இந்த ஆண்டு 1,400 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு கேரளாவில் பெய்த மழை இந்தியாவையே (கண்)நீரில் அளவிற்கு செய்துவிட்டது. அங்கு 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்படாமல் இருந்தது. கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வெள்ள பாதிப்புகள் இருந்தன. ஆனால் அவற்றை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு கேரளா வெள்ளத்தால் சிதைந்தது.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தேசிய அவரச உதவி மையத்துறை சார்பில் இந்த ஆய்வறிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 14 மாநிலங்களில் பருவமழையால் மட்டும் சுமார் 54.11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 14.52 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். 57,024 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை இந்தியா முழுவதும் சுமார் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் சுமார் 488 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 254 பேர், மேற்கு வங்கத்தில் 210 பேர், கர்நாடகாவில் 170 பேர், மகாராஷ்டிராவில் 139 பேர், குஜராத்தில் 52 பேர், அஸ்ஸாமில் 50 பேர், உத்தரகாண்ட்டில் 37 பேர், ஒடிசாவில் 29 மற்றும் நாகலாந்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர இந்தியா மொத்தம் 43 பேர் காணாவில்லை. கேரளாவில் 15 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 14 பேரும், உத்தரகாண்ட்டில் 6 பேரும், மேற்கு வங்கத்தில் 5 பேரும், கர்நாடகாவில் 3 பேரும் இதுவரை காணாமல் போயுள்ளனர். மேலும் 10 மாநிலங்களில் 386 பேர் பருவமழையால் காயமடைந்துள்ளனர்.