வென்றது வெறும் இரண்டு சீட் தான்! ஆனாலும் மேகாலயாவுக்கும் ஸ்கெட்ச் போடும் பாஜக!

வென்றது வெறும் இரண்டு சீட் தான்! ஆனாலும் மேகாலயாவுக்கும் ஸ்கெட்ச் போடும் பாஜக!
வென்றது வெறும் இரண்டு சீட் தான்! ஆனாலும் மேகாலயாவுக்கும் ஸ்கெட்ச் போடும் பாஜக!
Published on

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில், இம்மாநில தேர்தல் நிலவரம் குறித்து இங்கு அறிவோம்.

திரிபுரா நிலவரம்:

திரிபுராவில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் இறுதி நிலவரப்படி பாஜக 32 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. புதிதாக களமிறங்கிய திப்ரா மோத்தா கட்சி 13 இடங்களில் வென்று உள்ளது.

பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக அதைவிட ஓர் இடம் அதிகமாய் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து பாஜகவே மீண்டும் திரிபுராவில் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

நாகாலந்து நிலவரம்:

நாகாலாந்து சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் ஒன்றில் பாரதிய ஜனதா வேட்பாளர் போட்டியின்றி வெற்றிபெற்றிருந்தார். இதையடுத்து 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் NDPP - பாஜக கூட்டணி 37 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இக்கூட்டணியில் NDPP, தான் போட்டியிட்ட 40 இடங்களில் 25 இடங்களிலும் பாஜக போட்டியிட்ட 20 இடங்களில் 12 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. எதிர்க்கட்சியான NPP கட்சி 5  இடங்களிலும் NPF 2 இடங்களிலும் காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

NDPP தலைவரும் முதலமைச்சருமான நெய்பியூ ரியூ, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். திமாபூர் - 3 தொகுதியில் NDPP வேட்பாளர் ஹெக்கானி ஜக்காலு வெற்றிபெற்று நாகாலாந்து மாநில வரலாற்றில் முதல் பெண் எம்எல்ஏவாக தேர்வாகி இருக்கிறார்.

மேகாலயா நிலவரம்:

மேகாலயாவில் ஆளும் என்பிபி கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் தலா 5 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும்  வெற்றி பெற்றுள்ளன.

என்பிபி கட்சி பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகாலயாவில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. 1 இடத்தில் வேட்பாளர் இறந்ததால் பின்னர் தேர்தல் நடைபெறும். ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை. ஆட்சி அமைக்க போதிய இடங்கள் என்.பி.பிக்கு கிடைக்காததால் பாஜக.வுடன் மீண்டும் கூட்டணி வைக்க ஆலோசித்து வருகிறது. மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து கூட்டணி ஆட்சி தொடர்பாக வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே பாஜகவின் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மேகலயா முதல்வர் சங்மாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம் எனச் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. என்றாலும் அந்தக் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசாமல் 2 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றிருக்கும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி குறித்து பேசியிருக்கிறது என்.பி.பி. ஏற்கெனவே திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், மேகலயாவிலும் பாஜக கூட்டணி ஆட்சியே மலரும் என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.

பாஜக - என்பிபி கூட்டணி உறுதியானால், மேற்கண்ட 3 மாநிலங்களிலும் பாஜக ஆளும் சிறப்பைப் பெற்றுவிடும். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து என்பிபி கட்சி வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் பாஜக 6 இடங்களைக் கைப்பற்றும் எனவும், தொங்கு சட்டசபை ஏற்படும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. அதன்படி, தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com