கிராமத்து மக்கள் ஒதுக்கி வைத்ததால் ஜார்கண்ட் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பம் ஊரையே காலி செய்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் பிர்பூம் கிராமத்தைச் சேர்ந்த பெண், ஜார்கண்டுக்கு திருமணமாகி சென்றுள்ளார். வேலை நிமித்தமாகவும், தனது குழந்தைகளை அழைத்து வருவதற்காகவும் அடிக்கடி தனது சொந்த ஊரான பிர்பூம் கிராமத்திற்கு வந்து செல்வார். இந்நிலையில் ஜூலை 15ம் தேதி காவல்நிலைத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் '' காட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது என் சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்'' என்று தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மருத்துவ சோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.
சட்ட ரீதியாக புகார் அளிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டாலும் அக்கிராம மக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை ஒதுக்கி வைக்கத்தொடங்கினர். ஊருக்கு பொதுவான கிணற்றில் இருந்து நீர் எடுக்கக்கூடாது என்று ஒதுக்கி வைத்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்தார். அதன்படி அவர்கள் மீண்டும் கிணற்றை பயன்படுத்த தொடங்கினர். ஆனால் கிராம மக்கள் தொடர்ந்து அந்தக் குடும்பத்தினரையும் மிரட்டியும் ஒதுக்கியும் வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தக் குடும்பம் கிராமத்தை காலி செய்தது.
இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர், '' என் சகோதரி வேலை சம்பந்தமாக என் கிராமத்திற்கு வந்து செல்வார். அவரது கணவரும் அடிக்கடி தொழில் தொடர்பாக இங்கு வருவார்" என்று தெரிவித்தார்.
பாலியல் வழக்குகளில் பெண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை கிராமத்தை விட்டு வெளியேற்றுவது அக்கிராமத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் சர்வசாதாரணமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாவட்ட நீதிபதி அந்தப் பெண்ணை மீண்டும் கிராமத்துக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகவும், இந்தப் பிரச்னை தொடர்பாக கிராம மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்