மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி உள்ள பெட்டிகளை நீக்கிவிட்டு அதற்கு பதில் முழுக்க முழுக்க குளிர் சாதன வசதியுள்ள படுக்கைகளை மட்டுமே இணைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
டெல்லி - மும்பை, டெல்லி - கொல்கத்தா மார்க்கங்களில் ரயில்கள் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக் கூடிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி வரும் 2023ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில் இதற்கு பிறகு இப்பாதைகளில் ஓடும் எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டி அகற்றப்பட்டு குளிர்சாதன பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படும்.
வருங்காலங்களில் அனைத்து பாதைகளையும் படிப்படியாக அதிவேக ரயில் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் மாற்ற ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்வே உயரதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர். இதன்படி பார்த்தால் வருங்காலங்களில் சாதாரண படுக்கை வசதியுள்ள பெட்டிகள் நீக்கப்பட்டு குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படும் எனத் தெரிகிறது.