அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரணை செய்ய உள்ளது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கில் இன்றே உத்தரவு பிறப்பிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. காலை 11.30மணிக்குள் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின் விசாரணை முடிவில், `அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொதுக்குழு கூட்டமும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லாமல் போனது.
நேற்றைய தீர்ப்பு ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக வெளியான நிலையில், இன்றைய தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.