“பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு இந்திய தொழிலாளிகளை நாராயண மூர்த்தி காவு வாங்க வேண்டாம்” - சிபிஎம் செல்வா

“நாட்டின் வளர்ச்சியெல்லாம் இல்லை. முதலாளிகளின் வளர்ச்சிதான் இதில் அடங்கி இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி என்பது தொழிலாளர்களை சாவடிக்கும் வளர்ச்சியா?” - சிபிஎம் செல்வா
infosys
infosyspt web
Published on

இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கூறியுள்ளதுதான் தற்போதைய ஹாட் டாக்.

பாட்காஸ்ட் பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்த இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, “இந்தியாவின் உற்பத்தி திறன் மிகக்குறைவாக உள்ளது. இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். உற்பத்தி திறனை மேம்படுத்தாத வரை, ஊழல்களை குறைக்காத வரை வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது. எனவே அடுத்த 20 முதல் 50 ஆண்டுகளுக்கு இளைஞர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

நாராயண மூர்த்தியின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சிபிஎம் கட்சி செல்வாவை தொடர்பு கொண்டோம். அவர் கூறியது, “தொழிற்சாலை சட்டம் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலையை உறுதி செய்கிறது. 8 மணி நேரத்திற்கு மேல் தொழிலாளர்களை வேலை செய்ய வைத்தால் நடவடிக்கை எடுக்கலாம். தொழிற்சாலையின் உள்ளேயே அதிகபட்சம் 13 மணி நேரம்தான் தொழிலாளி இருக்க வேண்டும். ஐடி துறையில் இது போன்ற சட்டங்கள் இல்லை. இல்லாத இடத்தில் சட்டங்கள் வேண்டும் என போராடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர்களோ, ‘ஐடியில் இந்த நடைமுறை இருக்கும் போது தொழிற்சாலைகளில் ஏன் இந்த நடைமுறை இல்லை’ என கேட்பதுபோல் உள்ளது இந்த பேச்சு.

சிபிஎம் கட்சி செல்வா
சிபிஎம் கட்சி செல்வா

இந்திய முதலாளிகள் இந்தியாவில் இருக்கும் 8 மணி நேர வேலைத் திட்டத்தை மாற்ற வேண்டும் என்பது இன்று நேற்று தொடங்கிய பேச்சில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் கூட்டம்தான் இவர்கள். வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நிறுவனங்கள் இந்திய அரசிடம் வைக்கும் முதல் கோரிக்கையே, இந்தியாவில் இருக்கும் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போக செய்ய வேண்டும் என்பதுதான். மத்தியில் மோடி வந்த பின் 44 சட்டங்களாக இருந்த தொழிலாளர் நல சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றிவிட்டார்.

நாட்டின் வளர்ச்சியெல்லாம் இல்லை. முதலாளிகளின் வளர்ச்சிதான் இதில் அடங்கி இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி என்பது தொழிலாளர்களை சாவடிக்கும் வளர்ச்சியா? தொழிலாளி சாக வேண்டும், முதலாளி வாழ வேண்டுமா? நாராயண மூர்த்தியின் மருமகன் மற்றும் மகள் இங்கிலாந்தில் முறைகேடுகளில் சிக்கியவர்கள்தான். ஒழுங்காக வரி செலுத்தாமல் இருந்தவர்கள்தான். பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு இந்திய தொழிலாளிகளை காவு வாங்கும் செயலில் நாராயணமூர்த்தி ஈடுபட வேண்டாம்” என்றார் காட்டமாக.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com