செய்தியாளர் கணபதி சுப்ரமணியம்
நடப்புக் கூட்டத்தொடரில் முதன்முறையாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தனித்தனி அமர்வுகள் நடைபெற்ற நிலையில், மக்களவையில் இரங்கல் தீர்மானம் உள்ளிட்ட ஒரு சில அலுவல்கள் மட்டுமே நடைபெற்றன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட INDIA கூட்டணி தலைவர்கள் நீட் விவகாரத்துக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக விவாதத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர். சபாநாயகர் ஓம் பிர்லா அந்தக் கோரிக்கையை ஏற்காததால் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவை முதலில் 12 மணி வரையும் பின்னர் நாள் முழுவதுக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி கூறுகையில், “மிக முக்கியமாக இன்று நாடே பற்றி எரியக்கூடிய , ஒரு பிரச்னையாக மாறிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு விஷயம் நீட். அதுமட்டுமின்றி லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டு இருக்கக்கூடிய ஒரு விவகாரத்தை இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை ஒன்றிய அரசாங்கம் எடுத்துள்ளது. மரபின்படி, எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து பேச வேண்டும் என கேட்டபோது, அவர் பேச அனுமதிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில்தான் அமளி ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.
மாநிலங்களவையிலும் நீட் விவாதம் தேவை என கோரிக்கை எழுப்பப்பட்ட நிலையில், அவைத் தலைவரான குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அந்த கோரிக்கையை ஏற்கவில்லை.A கூட்டணி உறுப்பினர்கள் தொடர் முழக்கங்கள் எழுப்பிய நிலையில் மாநிலங்களவை முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போதும் இதே நிலை நீடித்ததால் மாநிலங்களவையில் கடும் அமளி நிலவியது.
இத்தகைய சூழலில் தொடர் முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருந்த காங்கிரஸ் பெண் உறுப்பினர் ஒருவர் அவையிலேயே மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருடைய சிகிச்சைக்காக மாநிலங்களவை இரண்டரை மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவர் ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் அவை கூடிய போது, நீட் குறித்து விவாதிக்க திமுகவின் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா வலியுறுத்தினார். இதனை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்ததால் திமுக தலைமையில் INDIA கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா கூறுகையில், “மருத்துவப்படிப்பு என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று. மாணவர்கள் அதை எப்படி தங்களது லட்சியமாக கனவாக கருதுவார்கள். அப்படிப்பட்ட ஒன்றை நாடாளுமன்றத்தில் பேச இடமில்லை என்றால், நாங்கள் அங்கு இருப்பதற்கு என்ன பொருள் இருக்கிறது” என தெரிவித்தார்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாத நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆளும் கூட்டணி எம்.பி. க்கள் மட்டுமே பங்கேற்றனர்.