18வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவி ஏற்றது. இந்நிலையில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நேற்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை பட்ஜெட்டை விவாதத்துக்கு முன்வைத்தபோது, “இந்த மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை; அநீதி இழைக்கப்பட்டுள்ளது” என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அப்போது பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்படுள்ளது. குறிப்பாக அவர், “சில மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கிவிட்டு, பல மாநிலங்களுக்கு நிதியே ஒதுக்கவில்லை. நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் இது” என்று கூறி தன் கண்டனத்தை பதிவுசெய்தார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பட்ஜெட்டில் எந்த மாநிலங்களையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் கூற முடியாது. திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்” என்று கூறி பேச முற்பட்டார். ஆனால் மாநிலங்களவை உறுப்பினர்கள் கடும் கூச்சலில் ஈடுபட்டதால் அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.
இதனால் அனைவரையும் அமைதி காக்கும்படியும், அவையில் அமைச்சரை பேச அனுமதிக்குமாறும் மாநிலங்களவை சபாநாயகர் ஜெகத்தீப் தன்கர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், “பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்கான நேரத்தை அனுமதிக்க தயார்” என்றும் தெரிவித்து கூச்சலை கட்டுக்குள் கொண்டுவர முற்பட்டார்.
ஆனால், நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருந்த போதே கூச்சலில் ஈடுப்பட்ட எதிர்க்கட்சியினர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் சிறிது நேரத்திலேயே சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸில் உள்ள முக்கிய தலைவர்கள் மட்டும் மீண்டும் அவைக்கு திரும்பினர்.