ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தியும் மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தன.
நேற்று முன்தினம் (ஜனவரி 31) குடியரசுத் தலைவரின் உரையுடன் துவங்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். இதனையடுத்து இன்று காலை 11 மணிவரை அவையானது ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று காலை அவை கூடியது. ஆனால் துவங்கிய சிறிது நேரத்திலேயே, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் கைது, தொடர்ந்து அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது, அவருக்கு தொடர்புடைய வீடுகளில் சோதனை மேற்கொண்டது போன்றவற்றை மேற்கோள்காட்டி எதிர்க்கட்சிகள், அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
மேலும் ‘பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வருமானவரித் துறை, அமலாக்கத்துறையால் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் திடீர் விசாரணைக்கு பலமுறை உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்தன.