ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் I-N-D-I-A கூட்டணி என இருதரப்புமே 2024ஆம் ஆண்டிற்கான தேர்தல் வியூகங்களை விரிவாக வடிவமைத்து வருகிறது. அதன் முக்கிய கட்டம்தான், நேற்று முன்தினம் (ஜூலை 18) நடந்த இரண்டு கூட்டங்கள். ஒன்று பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம். மற்றொன்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம்.
இதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு -I-N-D-I-A (Indian National Developmental Inclusive Alliance) என ஜூலை 18 தான் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய முன்னேற்ற ஐக்கிய கூட்டணி எனப் பொருள்படும் இந்த வார்த்தையை, தங்கள் கூட்டணிக்கு வைப்பதன் மூலம் அனைவரும் ஒற்றுமையுடன் இந்திய நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த வார்த்தையை முன்னெடுக்க, மற்ற கட்சிகள் தங்கள் தரப்பு கருத்துக்களைக் கூற அனைவரும் ஒருமித்து இந்த பெயரை தேர்ந்தெடுத்து இருப்பதாகவும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தங்களது கூட்டணியின் பெயர் கூடுதல் வலு சேர்க்கும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். அதேநேரத்தில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இந்தப் பெயரை பிரபலப்படுத்தி வருகின்றனர்.
மற்றொரு பக்கம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I-N-D-I-A எனப் பெயர்வைத்ததை விமர்சித்து வருகிறது. குறிப்பாக, I-N-D-I-A என்ற பெயர் ஆங்கிலேயர்களால் முன்வைக்கப்பட்டது என்றும் இன்னமும் அவர்கள் ஆங்கிலேய மனநிலையிலேயே இருப்பதைத்தான் இது பறைசாற்றுகிறது என்றும் பாஜக தலைவர்கள் பலரும் தற்போது விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
தாங்கள் தான் பாரத் என்ற பெயரை பயன்படுத்துவதாகவும் மத்திய அரசின் திட்டங்களான ஸ்வச் பாரத், வந்தே பாரத், பாரத் பருப்பு உள்ளிட்டவற்றிற்கு ஹிந்தி மொழியில் பெயர் சூட்டி பயன்படுத்துவதாகவும் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். ஒருபடி மேலே போய் அஸ்ஸாம் மாநில முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஹேமந்த் பிஸ்வாஷ், தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில், ’இந்தியா’ என்ற பெயரை ’பாரத்’ என்று மாற்றியுள்ளார்.
பாஜகவினுடைய இந்த வியூகத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அனைவருக்கும் பொதுவான பெயரான ’இந்தியா’ என்பதை பாஜக அவமதித்து வருவதாகவும் அவர்கள் கூறுவதுபோலவே பார்த்தாலும் ஒற்றுமை யாத்திரைக்கு ’பாரத் ஜோடோ’ என்று தாங்கள் பெயர் வைத்ததாகவும் கூறி வருகின்றனர்.
இப்படியாக, I-N-D-I-Aவின் பெயரை வைத்தே இருகூட்டணிக்குள்ளும் தற்போது பெரும் விவாதம் உருவாகியுள்ளது