மக்களவையில் சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி குறித்த விவாதம் நேற்று முன்தினம் (செப் 21) நடைபெற்றது. அப்போது பேசிய டெல்லி தெற்கு தொகுதி பாரதிய ஜனதா எம்பி ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை தரக்குறைவான, மரியாதைக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இந்த பேச்சு உடனடியாக நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
ரமேஷ் பிதூரியின் பேச்சுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையிலேயே வருத்தம் தெரிவித்தார்.
பிதூரியின் பேச்சை கண்டித்த சபாநாயகர், வருங்காலத்தில் இதேபோன்று கண்டிக்கத்தக்க வகையிலான பேச்சை பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். பிதூரியின் பேச்சு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமே அவமானம் என்று தெரிவித்த காங்கிரஸ் மூத்தத்தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அவரை அவையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யவேண்டும் என்றார்.
சமாஜ்வாடி கட்சி தலைவரும் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், “அநாகரிகமாக நடந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். பிதூரியின் பேச்சுக்காக அவரை மக்களவையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தியுள்ளது.
“இஸ்லாமியர்கள், ஓபிசி பிரிவினர்களை அவமானப்படுத்துவது பாரதிய ஜனதாவின் செயல்பாடுகளில் ஒன்று” என்று திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் மஹூவா மொய்த்ரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு, ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் பிதூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பிதூரி பேசியது மோசமான பேச்சு எனில் அதனை அருகில் அமர்ந்து சிரித்தபடி கேட்ட ஹர்ஸ் வர்தன் மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோருக்கும் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், பிதூரி பேசியது சரியாக காதில் விழவில்லை என ஹர்ஷ் வர்தன் மழுப்பலாகக் கூறியுள்ளார்.
ரமேஷ் பிதூரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ள எம். பி. டேனிஷ் அலி தன்னை இவ்வளவு கொச்சையாக பேசியதை நினைத்து இரவெல்லாம் தூக்கம் வரவில்லை என வருத்தத்துடன் பதிவு செய்து இருக்கிறார். இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதற்கு விளக்கம் அளிக்குமாறு பாஜக தலைமை ரமேஷ் பிதூரிக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ரமேஷ் பிதூரி கூறிய சொற்கள் அநாகரிகமாகவும் வெறுப்புணர்வுடனும் இருந்ததாக திமுக எம்.பி. கனிமொழி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவை விதிகள்படி ரமேஷ் பிதூரியின் செயலை உரிமை மீறல் குழுவை கொண்டு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார். உரிமை மீறல் நடவடிக்கை குழு தன் பரிந்துரையை அளிக்கும் வரை பாஜக எம்பி ரமேஷ் பிதூரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து தார்மீக ஆதரவளித்தார். அதுகுறித்து பின்னர் தெரிவித்த டேனிஷ் அலி, தனக்கு ஆதரவளிப்பதாகவும் தன்னைப் போல ஒருவர் மட்டுமல்ல பலரும் ஜனநாயகத்தின் பக்கம் நிற்பதாக ராகுல் காந்தி தெரிவித்ததாகவும் கூறினார்.