லக்கிம்பூர் கேரி சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பேரணி சென்றனர்.
உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் கார் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பிருந்து விஜய் சவுக் வரை பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில் திமுகவின் மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாணிக்கம் தாகூர், கே.சி.வேணுகோபால், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ராகுல்காந்தி தலைமையில் பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் லக்கிம்பூர் கேரி சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகவேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். அதேபோன்று நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சரை தப்பவிட மாட்டோம். இன்று அல்லது நாளை அவர் சிறைக்கு அனுப்பப்படுவார். லக்கிம்பூர் கேரி சம்பவத்தை விபத்து என அஜய் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார் என்றார்.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்ததே உ.பி-யில் ஆளும் பாஜக அரசுதான். அம்மாநில அரசே உள்துறை இணை அமைச்சர்தான் காரணம் என அறிக்கை கொடுத்துள்ள நிலையில், அவர்கள் அரசு கொடுத்த அறிக்கையையே மதிக்காத மத்திய அரசு யாரின் குரலையும் மதிக்காது. வேளாண் போராட்டங்கள் காரணமாக வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றாலும் கூட விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்றார். மேலும், லக்கிம்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் எனத் தெரிவித்தார்.
மேலும் இவ்வாதம் தொடர்பாக திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா பேசுகையில், நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஒப்புதலுக்காக கிடப்பில் உள்ளது தொடர்பாக மக்களவையில் திமுக மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் குரல் எழுப்பினோம். இதேபோல் மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களால் கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது குறித்தும் குரல் எழுப்பினோம். இவை தவிர வேளாண் சட்டங்கள் திரும்பபெற்றதை சாமர்த்தியம் என மத்திய அரசு எண்ணுகிறார்கள்.
உ.பி மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கார் மோதியதில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அம்மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை; அதன் காரணமாக உள்துறை இணை அமைச்சர் பதவிவிலக அரசும் அறிவுறுத்தவில்லை. அமைச்சரும் முன்வரவில்லை என்பதால் அதனை கையில் எடுக்கவேண்டிய பொறுப்பு எதிர்கட்சிகளுக்கு உள்ளது. அதனை வெளிக்கொண்டு வரும் விதமாகவும், மக்களிடம் எடுத்துரைக்கும் விதமாகவும் எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தியுள்ளோம். மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவி விலகும் வரை எங்களின் குரல் ஒலிக்கும் என்றார்.