மக்களவையில் ராகுல்காந்தி பேசும்போது பாரத் மாதா கி ஜே என பாஜகவினர் முழக்கமிட்டனர். சிவன், குருநானக், புத்தர், மகாவீர் படங்களைக் காண்பித்து மக்களவையில் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது கூச்சல்கள் எழுந்தபோது, மக்களவையில் சிவன் படத்தைக் காட்ட அனுமதி இல்லையா என்ற கேள்வியையும் ராகுல் எழுப்பினார்.
ராகுல்காந்தி பேசும்போது வாழ்க அரசியல் சாசனம் எனக் கூறி ராகுல்காந்தி உரையைத் தொடங்கினார். அப்போது பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டனர். ராகுல்காந்தி பேசும்போது, “இந்திய அரசியல் சாசனத்தை காத்துள்ளோம். 20க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதியப்பட்டுள்ளன. என் வீட்டையும் பறித்துக் கொண்டனர். தொடர் தாக்குதலில் இருந்து அரசமைப்பைக் காத்து வருகின்றோம்
பிரதமர் மோடிக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு இருக்கிறது. அவரால் நேரடியாகவே கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாகவே மோடியின் ஆன்மாவுடன் பேசுவார். நாம் எல்லோரும் பயாலாஜிக்கல். நாம் பிறப்போம். மரணிப்போம். ஆனால், பிரதமர் அப்படிப்பட்டவர் அல்லவே. அவர் நான்-பயாலாஜிக்கல் (Non-Biological). இவ்வளவு சொல்லும் மோடி, காந்தி இறந்துவிட்டதாக சொல்கிறார். திரைப்படத்தின் வழி காந்தி மீண்டும் உலகால் அறியப்பட்டார் என்கிறார் மோடி. பிரதமர் மோடியின் அறியாமையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா..?” என கூறினார்.
மேலும் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல என்று ராகுல் காந்தி கூறியதால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. ராகுல் உரைக்கு எதிர்ப்பு தெரிவிர்த்து பாஜகவினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
‘பாஜகவினர் வன்முறை இந்துக்கள்; உண்மையான இந்துக்கள் அல்ல’ என ராகுல் பேசியதற்கு மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“ராகுலின் பேச்சு இந்து சமூகம் மீதான தாக்குதல். இந்துக்களை வன்முறையாளர்களாக காட்ட ராகுல்காந்தி முயற்சிக்கிறார்” என்றும் கண்டனம் தெரிவித்தார். ராகுல்காந்தியோ, ‘மோடி இந்துக்களின் பிரதிநிதி அல்ல’ என்றார். தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும் ராகுலின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அமளி தொடர்ந்துகொண்டே வருகிறது.