கர்நாடகா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி, பாஜக ஆட்சியை நிறுவ, ‘ஆபரேஷன் லோட்டஸ்’ யுக்தியை மீண்டும் கையில் எடுத்திருப்பதாக, ஆளும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.., “2008, 2019 ஆண்டுகளில் அவர்கள் ‘ஆபரேஷன் தாமரை’ மூலமாக பின்வாசல் வழியாகவே ஆட்சியைப் பிடித்துள்ளனர். அதேபோலவே, இந்த முறையும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றனர்” என அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம், கடந்த ஒருவார காலமாக கர்நாடக அரசியலில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அது என்ன ‘ஆபரேஷன் லோட்டஸ்’?
பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத மாநிலங்களில், மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைப்பது ஆபரேஷன் லோட்டஸ் என வர்ணிக்கப்ப்படுகிறது. அருணாசலப் பிரசதேசம், மணிப்பூர், கோவா, மத்தியப் பிரதேசம் என இந்தப் பட்டியலில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அடங்கும். அந்தவகையில், 2019-ல் கர்நாடகவிலும் ஆட்சி மாற்றம் உண்டானது.
தமிழ்நாட்டைப் போல் அல்லாமல் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் மாநிலம் கர்நாடகா. அதன்படி, 2018-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் தனித்தனியாக தேர்தலில் களம் இறங்கின. மொத்தமுள்ள 224 இடங்களில், பாஜக 104 இடங்களையும் காங்கிரஸ் 80 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் கைப்பற்றின. தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதல்வரானார்.
பெரும்பான்மை இல்லாததால் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. தொடர்ந்து, காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைத்தது. குமாரசாமி முதல்வரானார். ஆனால், ஓராண்டிலேயே அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ-க்களையும் ம.ஜ.த கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து தன் பக்கம் இழுத்துக்கொண்டது பாஜக. அதையடுத்து, 16 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்த குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. பா.ஜ.க-வின் எடியூரப்பா மீண்டும் முதல்வரானார். இந்த நடவடிக்கைதான், ஆபரேஷன் லோட்டஸ் எனப்படுகிறது.
2008 தேர்தலிலும், மெஜாரிட்டிக்கு 113 இடங்கள் தேவையான நிலையில், 110 இடங்களைப் பிடித்து சுயேச்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு பாஜக ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, 2023-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் மும்முனைப் போட்டியே நிலவியது. காங்கிரஸ் 135 இடங்களையும், பாஜக 66 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களையும் கைப்பற்றின. தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, ஒரு சில மாதங்களிலேயே, “காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்கிறது. ஆபரேஷன் லோட்டஸை மீண்டும் கையிலெடுக்கிறது” என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. 100 கோடி வரைக்கும் பாஜக தரத் தயாராக இருப்பதாக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டினார். மாண்டியா எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா இதுகுறித்து தன்னிடம் கூறியதாகவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
தவிர, “மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, ஷோபா, மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் செல்போனில் பேசி வருகின்றனர். நூறு கோடி ரூபாயும் அமைச்சர் பதவி தருவதாகவும் கூறுகின்றனர். என்னிடமும் பேசினார்கள். நான் அமலாக்கத்துறையில் புகார் அளித்துவிடுவேன்” என எச்சரிக்கை செய்தேன் என குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், பாஜக தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ரவிக்குமாரிடம் யார் பேசியது என பொதுவெளியில் தெரிவிக்கவேண்டும் என பதிலளித்தனர்.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், “எங்களிடம் 64 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஆட்சியைப் பிடிக்க இன்னும் 64 பேர் வேண்டும். ஒருவருக்கு நூறு கோடி என்றால், 6400 கோடி ரூபாய் வேண்டும்.., ரவிக்குமாரின் பேச்சு குழந்தைத்தனமானது. எங்களுக்கு அந்த ஆட்சியைக் கவிழ்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள பிரச்னைகள், வால்மிகி முறைகேடு, மூடா முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களால் தானாகவே ஆட்சி கவிழ்ந்துவிடும். வாஜ்பாய் தொடங்கி மோடி வரை பயணித்து வருபவன் நான். என்மீது அவதூறு பரப்பினால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, பாஜக மாநிலச் செயலாளர் ராஜீவ், ரவிக்குமார் மீது புகாரளித்து, ஹூப்ளி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..