சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக் காலத்தை ஒட்டி இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. தந்திரி கண்டரரு ராஜீவ் தலைமையில் பழைய மேல்சாந்தி சுதிர் நம்புதிரி திறந்துவைத்தார்.
சபரிமலை புதிய மேல்சாந்தியாக வி.கே.ஜெயராஜ் போத்தியும், மாளிகைப்புறம் மேல்சாந்தியாக ஜனார்த்தனன் நம்பூதிரி என்றழைக்கப்படும் ரெஜி குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பொறுப்பானது புதிய மேல்சாந்தி வி.கே.ஜெயராஜிடம் கொடுக்கப்பட்டது.
கொரோனா விதிமுறைகளின் படி ஐயப்ப பக்தர்கள் நாளை முதல் கோயிலினுள் அனுமதிக்கப்பட உள்ள நிலையில், நாளை முதல் புதிய மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைப்பார். மகர விளக்கு பூஜை காலங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை 1000 பக்தர்களும், சனி ஞாயிறுகளில் 2000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
பக்தர்கள் கோயிலுக்கு வரும் போது, 24 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழை கொண்டுவர வேண்டும். தரிசனத்திற்கு முன்பதிவு கட்டாயம். அதிலும் 10 முதல் 60 வயதிற்குள்ளான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பம்பை, மணிமலையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பம்பை, மணிமலையாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 4 கிலோ மீட்டர் தூரமுள்ள மலையேற்றத்தின்போது முகக்கவசம் இடைஞ்சலாக இருந்தால் பக்தர்கள் அகற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளி மாநில பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு இங்கேயே தங்கி சிகிச்சை அளிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. விரும்பும் பக்தர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று திறக்கப்படும் சபரிமலை நடை டிசம்பர் 26 ஆம் தேதி அடைக்கப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டு, ஜனவரி 19ம் தேதி நடை அடைக்கப்படும். டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடக்க இருக்கிறது.