கடந்த இரண்டு வாரங்களாக நாசிக் உள்ளிட்ட மிகப்பெரிய வெங்காய சந்தைகளில் வெங்காயத்தின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளன. சில மாநிலங்களில் பெய்துவரும் அளவுக்கு அதிகமான பருவமழை காரணமாக, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தென் மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடாக மாநிலங்களில் பயிர் செய்யப்பட்ட காரிப் பருவ வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு, ஜூலை முதல் செப்டம்பர் வரையில் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். தற்போது கனமழை காரணமாக வயல்களில் நீர் சூழ்ந்துள்ளதால் வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர்.
மேலும், குஜராத், மகராஷ்டிரா, மத்தியப்பிரதேச மாநிலங்கள் மற்றும் வெங்காயம் விளையும் மற்ற பகுதிகளிலும் பருவமழை காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், கடந்த இரு வாரங்களில் வெங்காயத்தின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் வெகுவாக உயர்ந்துள்ளன.
மெல்ல விலை உயர்ந்துவரும் வெங்காயம், அக்டோபர் மாதத்தில் ஒரு கிலோ நூறு ரூபாய் அளவுக்கு விற்கலாம் என வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.