அத்தியாவசிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயத்தின் விலை கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. டெல்லியில் அதன் விலை கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் ஆக உள்ளது.
ஒரு வாரத்திற்கு முன் விலை 40 ஆக இருந்த நிலையில் தற்போது இரட்டிப்பாகியுள்ளது. பிற மாநிலங்களில் வெங்காயம் விலை 40 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. விலை உயர்வால் சாமானியர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க டெல்லியில் கூட்டுறவு கடைகள் மூலம் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்கப்படுகிறது.
டெல்லியில் பல உணவகங்கள் வெங்காயம் பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டுவிட்டன அல்லது நிறுத்திவிட்டன. கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் வெங்காயம் விலை கிலோவுக்கு 80 முதல் 90ஆக இருப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் வெங்காயம் விலை நூறு ரூபாயை நெருங்கிவருகிறது.
சென்னை கோயம்பேட்டில் வெங்காயம் விலை கிலோவுக்கு 50 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடுமையான வெயில் அதே நேரம் பருவம் தவறி பெய்த மழை காரணமாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய விளைச்சல் குறைந்ததே அதன் விலை அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. எனினும் மகாராஷ்டிராவில் இருந்து அடுத்த சாகுபடி பருவத்தில் 15 முதல் 20 லட்சம் டன் வெங்காயம் சந்தைகளுக்கு வர இருப்பதால் அதன் விலை குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.