நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் திட்டம் வரும் டிசம்பர் 1ம் தேதி நடைமுறைக்கு வருகிறது. இது குறித்து கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இவற்றை சராசரியாக நாளொன்றுக்கு ஒரு கோடியே 40 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. அனைத்து வகையான கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசல், காலதாமதத்தால் ஊழியர்களுடன் ஏற்படும் வாக்குவாதங்கள், கைகலப்புகள், வன்முறைச் சம்பவங்களை தவிர்க்கும் வகையில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ரொக்கமாக பணம் வசூலிக்கும் முறை கைவிடப்படுகிறது. அதற்குப் பதிலாக FASTag எனப்படும் மின்னணு முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, வாகனத்தின் முகப்புக் கண்ணாடியில் FASTag மின்னணு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் வாகனங்கள் மட்டுமே இனி சுங்கச்சாவடிகளை கடக்க முடியும்.
இந்த FASTag மின்னணு ஸ்டிக்கர் எல்லா சுங்கச்சாவடிகளிலும் விற்பனை செய்யப்படும். தங்களுடைய வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் நகலை கொடுத்து ஸ்டிக்கரை பெற்றுக் கொள்ளலாம். இந்த ஸ்டிக்கரை பயன்படுத்தி தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். சுங்கச்சாவடிகளை கடக்கும்போது இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஸ்கேனர், ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து சுங்கக் கட்டணத்தை பிடித்தம் செய்துகொள்ளும். இந்த முறையினால், நேர விரயம் தவிர்க்கப்படுவதுடன், சுங்கச்சாவடிகளில் தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்க்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, வாகனங்களின் பதிவு எண்ணும் FASTag மின்னணு ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணும் ஒன்றாக இருந்தால் மட்டுமே சுங்கச்சாவடிகளை கடக்க முடியும். FASTag ஸ்டிக்கர் ஒட்டாமல் கடக்கும் வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் வாகனங்களில் தப்பிச்செல்ல முயன்றால் அவர்களை எளிதில் பிடிக்க உதவும் என்று கூறப்படுகிறது. இவை மட்டுமின்றி, அரசியல் கட்சி பிரமுகர்கள் செல்லும் வாகனங்களுக்கு விதிவிலக்கு இல்லை என்பதால் தேவையற்ற சச்சரவுகளும் ஏற்படாது என்றும் நம்பப்படுகிறது.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலித்தாலும், சாலை வரி கட்டும் நாம் ஏன் சுங்கக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்ற கேள்வியும், ஒப்பந்தம் முடிந்த சுங்கச்சாவடிகளில் இன்னும் சுங்கக் கட்டண வசூல் தொடர்வது ஏன் என்றும் சொந்த வாகனம் வைத்திருப்போர், வாடகைக் கார் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நீண்டகாலமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.