“பூமி சூரியனை சுற்றவில்லை..சூரியன்தான் பூமியை சுற்றுகிறது” - போராடும் இந்திய விஞ்ஞானி

“பூமி சூரியனை சுற்றவில்லை..சூரியன்தான் பூமியை சுற்றுகிறது” - போராடும் இந்திய விஞ்ஞானி
“பூமி சூரியனை சுற்றவில்லை..சூரியன்தான் பூமியை சுற்றுகிறது” - போராடும் இந்திய விஞ்ஞானி
Published on

அறிவியல் என்பது புதியாத புதிர். ஒருவர் முதலில் உலகம் தட்டை என்றார். அடுத்தவர் இல்லை..இல்லை அது உருண்டை என்றார். இறுதியில் உலகம் உருண்டையானது. அறிவியல் அதனை ஏற்றது. ஆகவே அறிவியல் கருத்துக்கள் கடந்து வந்த வரலாறு மிகவும் விசித்திரமானது, ஆச்சர்யங்கள் நிறைந்தது.

ஒவ்வொரு அறிவியல் கருத்தும் முந்தைய கருத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன் வைத்தே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அறிவியல் உலகவை புராட்டி போட்ட, சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற அத்தனை கோட்பாடுகளுக்கும் இது பொருந்தும். தாங்கள் தெரிவித்த கோட்பாடுகளுக்காக சில அறிவியல் அறிஞர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். 

அறிவியல் அறிஞர் என்பவர் ஒரு கருத்தினை அடுத்தக் கட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அல்லது முந்தையைக் கருத்தினை மறுத்து தன்னுடைய கருத்துதான் சரி என்று நிரூபித்தாக வேண்டும். இவ்வாறு ஒரு கருத்தினை மறுத்து புதிய கருத்தினை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஒரு கோட்பாட்டை ஒரு அறிஞர் மறுப்பதும், அந்த அறிஞரின் கருத்தினை மற்றொருவர் மறுப்பதும் தொடர்ச்சியாக நிகழும் நிலை. அதாவது, அறிவியலில் ஒவ்வொரு வகையான கோட்பாட்டிற்கும் நீண்ட நெடிய வரலாறு என்பது உள்ளது. 

 அந்த வகையில் அண்டத்தை பற்றிய பல்வேறு கோட்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பூமி எப்படி தோன்றியது, பூமியில் உயிரினங்கள் எப்படி தோன்றியது என்பது பற்றி பலரும் பல கருத்துக்களை முன் வைத்துள்ளனர். தொடக்கத்தில் கடவுள்தான் பூமியையும், உயிரினங்களையும் படைத்தார் என்ற கருத்தே எல்லோர் மத்தியிலும் நிலவியது.

பின்னர், பூமி உள்ளிட்ட அண்டத்தை பற்றிய கோட்பாடு பெருவெடிப்பு கொள்ளையில் நிலை பெற்றது. அதாவது நெருப்பு பிழம்பிலிருந்து வெடித்து சிதறிய பூமி உள்ளிட்ட கோள்கள் பின்னர் குளிர்ந்து கோள்களாக உருவாகின. பூமியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து முதலில் அமீபா உயிரினம் தோன்றியது. இதில் டார்வின் கோட்பாடும் முக்கிய பங்காற்றியது.

அதேபோல், அண்டவியலில் முக்கியமான ஒரு கேள்வி பூமியை, சூரியன் உள்ளிட்ட கோள்கள் சுற்றுகிறதா?, சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றுகின்றனவா? என்பது. முன்பே கூறியதை போல் பூமி தட்டையா? உருண்டையா என்ற கேள்வியும் கூட நீண்ட ஆண்டுகள் நிலவியதை பலரும் அறிவர். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தக் கேள்விகளுக்கு பல்வேறு பதில்கள் கோட்பாடாக முன் வைக்கப்பட்டு வருகின்றன. 

கிபி 2ம் நூற்றாண்டில் வானியல் அறிஞர் தாலமி உருவாக்கிய புவி மையக் கோட்பாடுதான் கிட்டத்தட்ட 13 நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருந்தது. ‘பிரபஞ்சத்தில் பூமிதான் மையத்தில் உள்ளது. பூமியைச் சுற்றி சூரியன் உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகிறது’ என்ற பூமி மையக் கோட்பாடு 1300 ஆண்டுகள் நம்பப்பட்டு வந்தது. 

அதன் பிறகு சூரியனைத்தான் பூமி உள்ளிட்ட மற்ற கோள்கள் சுற்றி வருகிறது என்ற சூரியன் மையக்கோட்பாட்டை 15-16-ம் நூற்றாண்டில் நிக்கோலஸ் கோபர்னிக்கஸ் முன் வைத்தார். கலீலியோ தொலைநோக்கி மூலம் பூமி உட்பட ஏனைய அனைத்துக் கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன என்பதை நிரூபித்தார். இந்தச் சூரிய மையக் கோட்பாடுதான் இன்றளவும் அறிவியல் உலகில் நம்பப்படுகிறது. 

இந்நிலையில், கோப்பர்நிக்கஸின் சூரிய மையக் கோட்பாட்டினை மறுத்து பூமி மையக் கோட்டை கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் கடந்த 40 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்ற செய்தி தெரிய வந்துள்ளது. இவர் பெயர் கார்த்திக் சந்திர பால். 75 வயதான இந்த கே.சி.பாலின் கதை மிகவும் வித்தியாசமானது. 8 ஆம் வகுப்புகூட படிக்காத இவர் இந்தோ-சீன போரின் போது ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியவர். ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே, அண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி அவருக்குள் பற்றிக் கொண்டது. 

குறிப்பாக,  இரண்டு கோள்களின் கூட்டங்கள் மாறாமல் இருப்பதாக அவர் உணர்ந்துள்ளார். அந்தத் தருணத்தில் சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதற்காக பல்வேறு புத்தகங்களை படித்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். அண்டவியல் கோட்பாடு என்றாலே வரைபடங்கள் மற்றும் 3டி மாடல்கள் முக்கியமானவை. தன்னுடைய கோட்பாட்டை நிரூபிக்க பல்வேறு வரைபடங்களை வரைந்து தள்ளினார் இவர். அன்று தொடங்கி கடந்த 40 ஆண்டுகளாக ஒரே கருத்தினை சலிப்பே இல்லாமல் தெரிவித்து வருகிறார். அதற்காக அவர் கடந்து வந்த பாதைதான் மிகவும் கடுமையானது. 

ராணுவத்தில் இருக்கும் போதே தன்னுடைய கருத்துக்கள் குறித்து செய்திதாளில் பேட்டி அளித்துள்ளார். அது குறித்து ராணுவத்தில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் விளக்கம் கொடுக்கவில்லை. இதனால், அவர் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டார். 20 வருடங்கள் ராணுவத்தில் இருந்த பால், வேலையில் இருந்து வெளியே வந்ததும், தன்னுடைய கருத்துக்களை புத்தகங்களாக மாற்றி தெருவில் இறங்கி விற்பனை செய்து வந்தார். கொல்கத்தா நகர் முழுவதும் தன்னுடைய கருத்துக்களை அடங்கிய நோட்டீஸை பல்வேறு இடங்களில் ஓட்டி வைத்தார். 

ஆனால், அவருடைய கருத்தினை யாருமே கண்டு கொள்ளவில்லை. கே.சி.பாலின் கருத்து அறிவியலுக்கு எதிரானது என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவர் விடாப்படியாக தன் கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார். இதற்கிடையில் கொல்கத்தா மின்சார வாரியத்தில் இவருக்கு வேலை கிடைத்துள்ளது. 

1980 முதல் 2005 வரை அந்த வேலையில் இருந்த அவர், அதன் மூலம் தனக்கு கிடைத்த பெரும் பகுதி பணத்தை தன்னுடைய கருத்துக்களை பிரச்சாரம் செய்ய பயன்படுத்தினார். அவருடைய பிரச்சாரத்தில், “ஓராண்டிற்கு ஒரு முறை சூரியன் பூமியை சுற்றி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களுக்கு இந்தப் புதிய கருத்து சவால் விடும். பத்திரிகையாளர்களுக்கும், அறிவியல் அறிஞர்களுக்கும் கண் தெரியவில்லையா?” என்ற வாசகம் இருக்கும். வெள்ளை தாளில் கருப்பு நிறத்தில் வரைபடங்கள் வரைந்து, வாசகங்கள் எழுதி பரப்ப ஆரம்பித்தார். 

2000 ஆம் ஆண்டில் ஒரு சுவாரஸ்யமான அனுமானத்தை கே.சி.பால் வெளியிட்டார். செவ்வாய் கோளானது அழியக் கூடியது என்பதுதான் அந்தக் கருத்து. , “செவ்வாய் கோளுக்கு பூமியைப் போன்ற நிலைத்த ஆயுள் இல்லை. செவ்வாய் அழியக் கூடியது (“dead star”). பூமி நிலையானது. ஒரு விண்மீனாக நிலைப் பெற்ற பிறகு, தற்போது அதனுள் நெருப்பு கனன்றுகொண்டிருக்கிறது. சில கோள்களுக்கு மட்டுமே இதுபோன்ற நிலைபெறும் தன்மை உள்ளது. இது செவ்வாய்க்கு இல்லை” என்று கூறியிருந்தார். 

நீண்ட காலமாக பிரச்சாரம் செய்தும் தன்னுடைய கருத்துக்களை யாரும் சீண்டவில்லை என்பதால், “முடிந்தால் என் கருத்துக்களை தவறு என்று  நிருபியுங்கள்” என்று ஒரு கட்டத்தில் பிரச்சாரம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் கொல்கத்தாவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் முக்கிய அங்கமாக இருந்து தன்னுடைய பிரச்சரத்தை செய்து வந்தார். இந்த வருடம் கே.சி.பாலின் கருத்துக்கள் அறிவியலுக்கு புறம்பானது என்று கூறி போலீசார் அவரை புத்தக கண்காட்சியில் இருந்து வெளியேற்றினர். மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கும் தன்னுடைய கருத்தினை அனுப்பி வைத்தார். ஆனால், அங்கிருந்து பதிலேதும் வரவில்லை.  

கே.சி.பால் கூறும் கருத்துக்கள் சரியா? தவறா? என்பது இரண்டாம் பட்சம். ஆனால், தன்னுடைய கருத்தினை எடுத்துக் கொண்டு கொல்கத்தா நகர் முழுவதும் நடந்து அவர் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். கொல்கத்தா நகரில் பிறந்து வளர்ந்த இரண்டு தலைமுறையினர் இவரது பிரச்சாரத்தை அறிந்திருக்காமல் இருக்க முடியாது. கே.சி.பாலின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு “Sun Goes Around The Earth” என்ற தலைப்பில் இயக்குநர் அரிஜித் பிஸ்வாஸ் கடந்த ஆண்டு ஒரு படத்தினை உருவாக்கினார். இந்தத் திரை வெளிச்சம் இந்த அறிவியல் காதலன் மீது நிச்சயம் ஒரு சொட்டு புகழ் வெளிச்சத்தை படரவிடும் என்பது உறுதி. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com