பிமா கொரேகான் (Bhima koreagaon) யுத்தத்தின் 200ஆவது ஆண்டைக் குறிக்கும் நிகழ்வில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்துள்ளனர்.
1818ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புனேவில் நடந்த பிமா கொரேகான் யுத்தத்தில் கிழக்கிந்திய கம்பெனி படையினர், பெஸ்வா படையினரை வெற்றி கொண்டனர். அப்போது கிழக்கிந்திய கம்பெனி படையில் மஹார் இனத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதை தலித் பிரிவினர் ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றியக் கொண்டாடுவதா என்று மராத்தா சமூகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டும் புனேவில் உள்ள போர் நினைவுச் சின்னத்தை நோக்கி நேற்று ஒரு பிரிவினர் சென்றனர். அவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சில வாகனங்கள், அருகிருந்த வீடுகள் தாக்குதலில் சேதமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், கூடுதல் பாதுகாப்புப் படையினர் அங்கு காவல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கலவரம் காரணமாக இன்றும் மும்பையின் பல பகுதிகளில் பதற்றம் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.