மத்தியப் பிரதேசத்தில் நகராட்சி அலுவலரை பாஜக எம்எல்ஏ ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. இதற்கான பணியில் ஈடுபட்டிருந்த அலுவலரை அனைவரின் முன்னிலையில் பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்கியா கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். கட்டடங்களை இடிக்க லஞ்சம் கேட்டதால் அதிகாரியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
கட்டடங்களை இடிக்கக் கூடாது என தனது ஆதரவாளர்களுடன் ஆகாஷ் விஜய்வர்கியா கேட்டதற்கு மறுத்ததால் தாம் தாக்கப்பட்டதாக நகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட ஆகாஷ் விஜய்வர்கியா பாஜக மூத்த தலைவரும், மேற்குவங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் முதலில் “இன்னும் 5 நிமிடத்தில் நீங்கள் இந்த இடத்தில் இருந்து கிளம்பி ஆக வேண்டும். இல்லையெனில் நடப்பதற்கு நீங்கள்தான் பொறுப்பு” என விஜய்வர்கியா எச்சரிக்கிறார். பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது. அதனையடுத்து கோபமடைந்த விஜய்வர்கியா கிரிக்கெட் மட்டையால் அதிகாரியை அடிக்கிறார். அதனை அங்கிருக்கும் போலீசார் தடுக்க முயல்கிறார். அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து அதிகாரிகளை தாக்குகின்றனர்.
பின்னர், “10 நிமிடத்தில் இங்கிருந்து கிளம்புங்கள் என்று கூறினேன். இதற்கு மேலும் எங்களால் இதனை சகித்துக் கொள்ள முடியாது. நான் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. இது என்னுடைய தொகுதி. அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பது என்னுடைய பொறுப்பு. அதற்கான எல்லா முயற்சிகளையும் நான் மேற்கொண்டு வந்திருக்கிறேன். ஆனால், நகராட்சி அதிகாரிகள் மக்களின் குரலை கேட்பதில்லை. நான் மிகுந்த கோபத்தில் இருந்தேன்.” என்று விஜய்வர்கியா செய்தியாளர்களிடம் பேசினார்.