“முலாயம் சிங் கருத்தை மதிக்கிறேன்” - ராகுல் காந்தி

“முலாயம் சிங் கருத்தை மதிக்கிறேன்” - ராகுல் காந்தி

“முலாயம் சிங் கருத்தை மதிக்கிறேன்” - ராகுல் காந்தி
Published on

சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் மக்களவையில் இன்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் சமீபத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜக அரசுக்கு எதிராகப் பேரணி நடத்தியது. அந்தப் பேரணியில் சமாஜ்வாதிக் கட்சியும், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்று, மோடி அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தது.

மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவை எதிர்க்க, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சியோடு, சமாஜ்வாதிக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அனைத்து தளங்களிலும் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பாஜகவை எதிர்த்து வருகிறார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது சமாஜ்வாதிக் கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், பிரதமர் மோடியின் செயல்பாடுகளையும் சேவையையும் வாழ்த்துகிறேன் எனவும், மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் எனவும் தெரிவித்தார். 

மேலும் பிரதமர் மோடி மட்டுமல்லாது இங்குள்ள அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று அவைக்கு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முலாயம் சிங் வாழ்த்திப் பேசிய போது அமர்ந்திருந்த பிரதமர் மோடி இரு கை கூப்பி, தலைவணங்கி முலாயம் சிங் யாதவுக்கு நன்றி தெரிவித்தார். மோடியைப் புகழ்ந்து முலாயம் சிங் பேசியபோது, அவருக்கு வலதுபுறம் சோனியா காந்தி அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முலாயம் சிங் யாதவ் கருத்து குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐக்கு அவர் பேட்டியளிக்கையில், “முலாயம் சிங் யாதவ் கருத்துடன் நான் உடன்படவில்லை. ஆனால் முலாயம் சிங் யாதவ் அரசியலில் ஒரு பங்கு வகிக்கிறார். அதனால் நான் அவருடைய கருத்தை மதிக்கிறேன்” எனத் தெரிவித்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com